கீழே தரப்படுகின்ற தகவல்கள் நம்பகமான அடிப்படையில் பெறப் பட்டவை
2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி.
முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை பாக்ஸ் அடித்துவிட்ட ராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இறுதி தாக்குதலுக்கு தயாராகின.
இந்த நேரத்துக்குள், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த பொதுமக்கள் ஏராளமான எண்ணிக்கையில், ராணுவம் நின்றிருந்த பகுதிக்குள் செல்ல தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் என்று தொடங்கி, பின் ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் ராணுவப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதை, விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இரவு 7 மணி.
அதிரடிப்படை-8 முற்றுகையிட்டு நின்றிருந்த இடத்தின் ஊடாக சரணடைய வந்த ஆயிரக்கணக்கானவர்களை சோதனை செய்து, ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். அந்த கூட்டத்தில், துப்பாக்கியை வீசிவிட்டு, சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள்.
இரவு 10 மணி.
இதற்குமேல் சரணடைய வந்தவர்கள் யாரையும், ராணுவ பகுதிக்குள் உள்ளே அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது. காரணம், இந்த பகுதியூடாக விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையில் சரணடைவதால், இருளில் சரணடைவது போல வந்து புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை.
18-ம் தேதி அதிகாலை 1.30 மணி.
அதிரடிப்படை-8 தளபதி கர்னல் ஜி.வி.ரவிப்பிரியவுக்கு காவலரணில் இருந்து போன் அழைப்பு வந்தது. “சுமார் 100 பொதுமக்கள் சரணடைய வேண்டும் என்று வந்திருக்கிறார்கள்”
இரவில் யாரையும் அனுமதிக்க முடியாது. அவர்களை நாளை காலை பகல் வெளிச்சத்தில் வரச் சொல்லுங்கள்” என்றார் ரவிப்பிரிய.
இதற்கு காவலரணில் இருந்த ராணுவ அதிகாரி, “இந்த பொதுமக்கள் கடலேரியில் (நந்திக்கடலுடன் இணைப்பாக உள்ள ஏரி) நிற்கிறார்கள்.
இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி, தம்மை அனுமதிக்கும்படி கோருகிறார்கள். பெண்கள், குழந்தைகளும் உள்ளார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுகின்றன” என்றார்.
“எப்படி இருந்தாலும் அனுமதிக்க முடியாது. அவர்களை மீண்டும் நாளை வரச் சொல்லுங்கள்”
இந்த தகவல், தண்ணீரில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சொல்லப்பட்டது. “வந்த வழியே திரும்பி போங்கள். மீண்டும் நாளை வாருங்கள்”
தம்மை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பது அந்த பொதுமக்களுக்கு நன்கு புரிந்தவுடன், காட்சி மாறியது. பெண்கள், குழந்தைகளுடன் நின்றிருந்த ‘பொதுமக்கள்’ 20 பேர், தமது பைகளில் இருந்து பல ரகத்திலான துப்பாக்கிகளை எடுத்தார்கள்.
58-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவால் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் இரண்டை நோக்கி சுட்டபடியே, அந்த இடத்தில் ராணுவ முற்றுகையை உடைக்க முயன்றார்கள்.
முள்ளிவாய்க்காலுக்குள் முடிக்கப்பட்டு இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு, வெளியேறும் திட்டம் இது என்று ராணுவத்துக்கு புரிந்து போனது. துப்பாக்கியால் சுட்டபடி தண்ணீரில் முன்னேறி வந்தவர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் திருப்பி சுட தொடங்கினார்கள்.
இதையடுத்து, துப்பாக்கியால் சுட்டபடி முன்னேற முயன்றவர்களால் நேரே வர முடியவில்லை. தண்ணீருக்கு உள்ளே இடது புறம் திரும்பி ஓடி, நந்திக் கடலோரம் தண்ணீரில் வளர்ந்திருந்த புதர்களுக்குள் மறைந்தார்கள். அந்த புதர்களை நோக்கி, அதிரடிப்படை-8 ராணுவத்தினர் RPG (Rocket-Propelled Grenade) தாக்குதலை நடத்தினார்கள்.
ராக்கெட்டுகள், அந்த புதர்களை சிதறடித்ததில், அதற்குள் மறைந்திருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். சில மணி நேரத்தின் பின் சூரிய வெளிச்சம் வந்தபின், புதர்களுக்குள் இறந்து கிடந்தவர்களின் உடல்களை ராணுவம் வெளியே இழுத்து போட்டபோது, விடுதலைப் புலிகளின் தளபதிகள் சூசை, சொர்ணம், ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
அந்த 20 பேரில் பிரபாகரன் இல்லை.
மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 17-ம் தேதி. இரவு 7 மணி.
சவிந்திர சில்வா தலைமையிலான 58-வது படைப்பிரிவினர், கும்மிருட்டு காரணமாக அன்றைய ஆபரேஷனை நிறுத்தினார்கள். இதையடுத்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்ட சவிந்திர சில்வா, கிளிநொச்சியில் அமைந்திருந்த 58-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கு செல்ல கிளம்பினார். அவர் கிளிநொச்சியை சென்றடைந்த போது, நள்ளிரவு நேரமாகி விட்டிருந்தது.
58-வது படைப்பிரிவு தலைமையகத்தில், முள்ளிவாய்க்காலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த உளவு விமானம் எடுத்து அனுப்பிய போட்டோக்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் சவிந்திர சில்வா.
நேரம் அதிகாலை 1.30.
இந்த நேரத்தில், முள்ளிவாய்க்கால் 58-வது படைப்பிரிவு ஆபரேஷன் சென்டரில் இருந்து போன் அழைப்பு வந்தது. விடுதலைப் புலிகள் ராணுவ முற்றுகையை உடைப்பதற்காக தாக்குதல் நடத்துவதாகவும், 53-வது படைப்பிரிவு முற்றுகையிட்ட இடத்தில் தாக்குதல் நடப்பதாகவும் சொல்லப்பட்டது.
53-வது படைப்பிரிவின் முற்றுகை லைன் மீது தாக்குதல் நடந்தால், அதற்கு அடுத்ததாக உள்ள முற்றுகை லைன், தமது படைப்பிரிவாக 58-வது டிவிஷனுக்குரியது என்பதால், மீண்டும் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டார் சவிந்திர சில்வா.
கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்ட சவிந்திர சிலாவாவின் ஜீப் புதுக்குடியிருப்பை நெருங்கிய நிலையில், அவரது வாக்கி-டாக்கியில் அழைத்தால், ராணுவ உளவுப்பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர்.
“53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை உடைக்க தாக்குதல் நடத்தும் குழுவில், பிரபாகரனும், பொட்டு அம்மானும் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள், அங்கிருந்த ராணுவ அம்புலன்ஸ் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக புலிகளின் ரேடியோ ட்ராக்ஸ்மிஷனில் இருந்து தெரிகிறது” என்றார் உளவுப்பிரிவு அதிகாரி.
இதையடுத்து ஜீப்பில் இருந்தபடியே தனது படைப்பிரிவுக்கு உத்தரவிட்டார் சவிந்திர சில்வா, “அனைத்து வாகன நடமாட்டங்களையும் உடனே நிறுத்தவும். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்புலன்ஸ் உட்பட, எந்த வாகனமும் அசையக்கூடாது.
இந்த நேரத்தில், 53-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை தாக்கிய விடுதலைப்புலிகள் அணி, 58-வது படைப்பிரிவின் முற்றுகை லைனை நோக்கி வந்துவிட்டது. மீண்டும் வாக்கி-டாக்கியில் ஒரு தகவல் வந்தது. “ராணுவ அம்புலன்ஸ் ஒன்று அந்த பகுதியில் நகர்கிறது. என்ன செய்வது?”
ஜீப்பில் பயணித்தபடியே பயரிங் ஆர்டர் கொடுத்தார் சவிந்திர சில்வா. அப்போது நேரம், அதிகாலை 3 மணி.
அம்புலன்ஸை நோக்கி 58-வது படைப்பிரிவினர் ராக்கெட் தாக்குதல் நடத்த, அது தீப்பிடித்தது. “அம்புலன்ஸூக்குள் இருந்தது யார் என பார்த்துவிட்டு உடனே எனக்கு தகவல் தாருங்கள்” என்றார், சவிந்திர சில்வா.
சில நிமிடங்களில் அந்த தகவல் வந்தது. “அம்புலன்ஸூக்குள் கருகிய நிலையில் இரு உடல்கள் உள்ளன. ஒன்று குள்ளமான பருத்த நபர். மற்றையவர் உயரமான நபர். முகங்கள் அடையாளம் தெரியாதபடி கருகியுள்ளன”
இதையடுத்து, அந்த இருவரும், பிரபாகரனும், பொட்டு அம்மானும் என நினைத்தார் சவிந்திர சில்வா. (ஆனால், அந்த உடல்களுக்கு உரியவர்கள், பிரபாகரனும், பொட்டு அம்மானும் அல்ல)
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என நினைத்த சவிந்திர சில்வா, முள்ளிவாய்க்கால் செல்லும் திட்டத்தை கைவிட்டு, புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்திருந்த 53-வது டிவிஷன் தலைமையகத்தை சென்றடைந்தபோது, நேரம் அதிகாலை 5 மணி.
அங்கே அவருக்கு மற்றொரு செய்தி காத்திருந்தது. 53-வது படைப்பிரிவு முற்றுகை லைனை உடைக்க வந்த விடுதலைப் புலிகளின் ஒரு பிரிவினர், முற்றுகை லைனை உடைத்துக்கொண்டு, ஏற்கனவே 58-வது படைப்பிரிவால் கிளியர் செய்யப்பட்ட யாருமற்ற பகுதிக்குள் (No man’s land) சுமார் 1 கி.மீ. வரை இருளில் சென்று விட்டது தெரியவந்தது.
உடனடியாக, ராணுவ வாகனங்களில் துரத்திச் சென்று அவர்களை தாக்கினர், ராணுவத்தினர். சிலர் கொல்லப்பட்டனர், சிலர் காயமடைந்து வீழ்ந்த நிலையில் கைப்பற்றப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர், பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் ஆன்டனி.
சார்ள்ஸ் ஆன்டனி கொல்லப்பட்டபோது, கையில் ஒரு துப்பாக்கியுடன் இருளில் ஓடிக்கொண்டு இருந்தார்.
- நன்றி விறுவிறுப்பு மற்றும் இலங்கை ராணுவம்
-தொடரும்-