Sunday, October 26, 2014


எல்லோரும் தமது திரைப்பட வாழ்வை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்குவது என்ற மரபிற்கு ஏற்ப நானும் எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை  துணை நிற்க .....!



நாம நேரா விசயத்துக்கே போயிடுவோம் முதல்ல இந்த படத்திற்கு சிலநொடி சிநேகம் என்பதுக்கு பதிலாக முயலும் ஆமையும்ன்னு பெயர் வெச்சிருக்கலாம். ஏன்னா படத்துல வருகிற ரெண்டு நாயககர்களும் அப்படித்தான் இருக்காங்க, உருவத்திலையும் சரி பாத்திரப் படைப்பிலும் சரி. ஆனாலும் இயக்குனர் நாயகர்கள் ரெண்டு பேர்லயும் இருக்குற தனிப்பட்ட கோவத்தை வைத்து இப்படி பழிவாங்கி  இருக்க வேணாம்ன்னு நம்ம விமர்சனக் குழு கருதுது. பின்ன என்னங்க எட்டு நிமிசப் படத்துல ரெண்டு நாயகர்ளையும் அஞ்சு  நிமிசத்துக்கு மேல வெயில்ல நடக்க விட்டு வாட்டி வதக்கி இருக்காரு. அதிலயும், நாயகன் ஆவிக்கு அவர் ஒரு டச்சப் பாய் கூட வைத்துக் கொடாமல் வியர்க்க விறுவிறுக்க நடிக்க விட்டதை பார்க்கும் போது இயக்குனர் மேல் கண்டனக் கூட்டம் போட்டு கண்டிக்க நினைத்தாலும், ஆவி கெட்ட கேட்டுக்கு இது போதும் என்கிற இயக்குனரின் மைன்ட்வாயிஸ் நமக்கும் கேட்பதால் மன்னித்து விடுகிறோம். இணை நாயகன் அரசன் ஸ்ட்ரைட்டா கதாநாயகன் என்கின்ற ரேஞ்சில் இயக்குனரிடம் கெஞ்சிக் கூத்தாடி இருக்குறார் என்பதை படத்தில் இயக்குனர் ஒஞ்சி  நிற்பது  காட்டிக் கொடுக்கிறது.



இதையெல்லாம் விட்டுவிட்டு போகலாம் என்றால், இன்றைக்கு குறுந்திரை நாயகன், நாளை வெள்ளித்திரை நாயகன், அப்புறம் ரசிகர் மன்றம், பிக்காளி சூப்பர்ஸ்டார், சுண்ணாம்பு திலகம் அப்புறம் தமிழ்நாட்டின் தலைவிதிக்கு ஏற்ப முதல்வர் கனவு என்று நாயகர்கள் இருவரும் மனப் பால் குடித்தது கடைவாய் வழியே வழிந்திருப்பது காட்டிக் கொடுக்கிறது. இதுக்கும் நாம்தான் விமர்சனம் எழுதணும் போஸ்டர் ஓட்டனும் என்கிற கொடுமையை நினைக்கும் போது தான் தாங்க முடியல.


ஜோக் ஒப் த பார்ட்டை இத்துடன் நிறுத்திவிட்டு..................!




இயக்குனராக பரிணாமம் எடுத்திருக்கும் நண்பர் குடந்தை ஆர். வி. சரவணனுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். முதல் முயற்சி போலில்லாமல் தேர்ந்த ஒரு திறமை படத்தில் தெரிகிறது. முதல் படமே வெளிக்களத்தில். காட்சிகளில் வழிப்போக்கர்கள் உட்பட எல்லோரும் இயல்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டதில் அவரின் நெறியாள்கை தெரிகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத கதை தேவையான இடத்தில் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள். வாழ்த்த தோணவில்லை, கற்றுக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக கதைக்கு ஏற்றமாதிரி நாயகர்கள்,   பாத்திரத்துடன் ஒன்றிப் போன மாதிரி ஒரு உருவ மைப்பு ரெண்டு பேருக்கும்.


அரசன், நம்மை தினசரி கடந்து செல்லும் சாதாரண இளைஞ்சனின் உருவம், குறும்படம் என்று ஏனோ தானோ என்றில்லாமல் பாத்திரத்துடன் ஒன்றித்துப் போனது போன்று இருந்தது. வசனங்களில் சரியான தெளிவு. ஆவி, மத்தியதர மனிதனின் தோற்றம் அவரின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது. வசன உச்சரிப்புக்களில், நடிப்பில் அரசனுக்கு சரியான போட்டி. 




வாழ்த்துக்கள் நண்பர்களே, இதுபோன்று புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Saturday, September 20, 2014

அவன் புறப்பட்டு விட்டான்,அவள் ஊருக்கு........ அவளைப் பார்க்க பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்பயணம்.... திடீர் ஞானம் வந்து புறப்படவில்லை, இது வரை போகாமலிருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்க்கும் தைரியமில்லை என்பது தான் முக்கியமானது. ஆனால் இப்போது தயக்கத்தை ஆவல் வென்றுவிட காலமும் கைகோர்க்க கிளம்பி விட்டான். பயணம் என்னவோ முன்னோக்கி இருந்தாலும் சிந்தனை மட்டும் பின்னோக்கி சென்று கொண்டிருந்து.

அவன் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது, மேட்டில் ஏறியதை விட பள்ளத்தில் வீழ்ந்ததே அதிகம், சொந்தபந்தப் பிணைப்பு இன்றி தன்னந்ததனியாக வாழப் பழகியவன். அந்த அரவணைப்புக்கு ஏங்கியவன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்  பாதையில் சென்றவன். பாசங்களில் நம்பிக்கையற்று அந்த சுழற்சியில் சிக்காமல் தன் போக்கில் உள்ளவன். அதனால் தான்  காதல் என்ற எதுவும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்ளவும் முடியாமல், உதறித்தள்ளவும் முடியாமல் அவஸ்த்தை வாழ்வு. இதை விட சொல்லும்படியாக விசேஷமானவன் இல்லை. காலம் இப்படி அவனை நகர்த்தி செல்லும் வேளையில் தான் ஒரு பொதுப் பிரச்சனையில்   அந்த தேவதையைக்  கண்டான். அந்த பிரச்சனையில் இருவரும் ஒரு அணியில் கைகோர்க்க வேண்டிய நிலை, அதற்க்கு தீர்வு காண எடுத்துக் கொண்ட நேரத்தில் இருவரும் அறிமுகம் ஆகி நட்பென்ற நடையில் கைகோர்த்துச் சென்றனர் ..

நாட்கள் செல்ல செல்ல இருவரதும் நட்பும்  பெருகி தங்களது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு போனது. கஷ்ட நஷ்டங்கள் என்றால் எல்லாம் அவனுடையது தான், அவளது என்று எதுவும் இல்லை, காரணம்,  அவள் வாழ்க்கை நேரான சாலையில் எதிர்ப்படும் ஓன்று இரண்டு ஸ்பீட் பிரேக்கர் தவிர சீரான பயணம் போல. பெற்றோருக்கு மூத்தவள், தம்பி ஒருவன், படிக்கிறான். அப்பா அரசாங்க உத்தியோகம், அன்பான அம்மா. அவளும் நல்ல படிப்பு, கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகம் என்று பெருமையாக வளம் வரும் குடும்பம். அதுமட்டுமா? என் பிள்ளை போல் யாருன்னு அவள் பெற்றோரும், பெற்றால் இவளைப் போல பிள்ளை பெற வேண்டும் என்று சொந்தங்களும், அவளைப் பார்த்து வாழப் பழகுங்கள் என்று தங்கள் பிள்ளைகளுக்கு சுற்றத்தாரும் சொல்லக் கூடிய அளவுக்கு அவளது குணநலன்கள். அதனால் தான் அவன் சுகதுக்கங்களுக்கு ஒரு வடிகாலாக இருந்தாள். ஆறுதல் வார்த்தைகளால் அரவணைத்தாள். அவனும் அவள் என்றால் உருகினான். அவள் கூட பேசாமல் இருக்க முடியாது என்கின்ற அளவுக்கு ஆளானான். யாருக்கும் பிரயோசனப் படாமல் அவனுள் இருந்த அன்பு பாசம் எல்லாவற்றையும் அவள்மீது கொட்டினான். ஆனால் அவள் சூழலில் கிடைத்த  அன்புக்கு அது ஈடு இல்லையென்றாலும் புது அனுபவமாக அவளும் அனுபவித்தாள். ஆனாலும் அவளும் அவனும் நட்பு என்னும் எல்லை மீறவில்லை. ஆனாலும் காலம் அதனை மீறவைக்க வழி வகுத்தது.

அவளது அலுவலக வேலையாக வெளியூர்க்கு ஒரு வாரப் பயணம் போக நேர்ந்தது. அவனிடமும் சொன்னாள். அவனும் அவளுடன் ரயில் நிலையம் சென்றான். இருவரும் வழமை போல் பேசிக்கொண்டு இருந்தார்கள், அவள் செல்ல வேண்டிய ரயிலும் வந்தது, ஏறிக் கொண்டாள், கையசைத்து விடை கொடுத்தான். ரயில் பார்வையை விட்டு மறைந்ததும் தான், கவனித்தான் கன்னங்களில் ஈரம். கையை வைத்து பார்த்தான். திடுக்கிட்டு போனான் கண்கள் அழுது இருந்தது தெரிந்தது. அவன் வாழ்க்கையில் முதல் தடவை கண்ணீர். அறைக்கு வந்தான். மனசு ஒரு நிலையில் இல்லை, அவள் பிரிவு வாட்டியது, அது மட்டுமா அவள் போனதற்கு ஏன் கண்ணீர் வந்தது என்று புத்தி மனதிடம் விசாரணை செய்து கொண்டிருந்தது. எப்படியான வேதனையிலும் கலங்காதவன், அவள் இல்லாத பொழுதினில் புழுவாக துடித்தான். சோறு தண்ணி தூக்கம் தொலைத்தான். அன்று இரவும் வந்தது, அவளும் ஊர் போய் சேர்ந்ததும் முதலில் அவனுக்கு தான் போன் பண்ணினாள், அவள் குரலிலும் அதே தவிப்பும் வேதனையும் தெரிந்தது. அவள் குரல் கேட்ட நொடியில் இவன் வேதனை ஏக்கம் எல்லாம் மாயமானது. விடிய விடிய பேசினார்கள். இரவு தொலைபேசியில் நண்பர்களாக ஆரம்பித்தவர்கள், காலையில் காதலர்களாக தொலைபேசியை துண்டித்தார்கள். அத்துடன் அவர்கள் காதலும் சிறகு கட்டிப் பறந்தது, இந்த உலகத்தை மறந்தார்கள், கற்பனையில் வாழ ஆரம்பித்தார்கள், பிள்ளை குட்டி கூட பெற்றார்கள். சண்டை போட்டார்கள் அழுதார்கள், ஊடலும் கூடலுமாய் திளைத்தார்கள். காலம் எப்போதும் மனித வாழ்வை சீராக கொண்டு போக விரும்புவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறுவதில்லை என்ற நியதிக்கு இவர்களும் ஆளானார்கள்.

அவன் தேவதைக்கு வீட்டில் திருமணத்துக்கு வரன் தேடும் படலம் ஆரம்பமாயிற்று. அவள் பெற்றோர் அவளுக்கு கணவனாக வருபவனுக்கு இருக்க வேண்டிய தகுதி அந்தஸ்த்து என்று ஒரு வட்டம் போட்டு தேட சுற்றமோ கூட ஜாதி குலம் கோத்திரம் என்று அதற்கு மேல் ஒரு வட்டம் போட்டு சல்லடை போட்டு சலிக்க தொடங்கினார்கள். இவர்கள் இருவரும் நிலைகுலைந்து போனார்கள். காரணம் அவர்கள் போட்ட நிபந்தனைகளில் பத்துக்கு ரெண்டில் கூட இவன் தேற மாட்டான். அவனுக்கு இருந்த ஒரே ஒரு தகுதி அவள் மனதை வென்றவன். அதை ஏற்றுக் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவள் குடும்பத்தில் காணப் படவில்லை. அதற்காக அவர்கள் வெறி பிடித்தவர்கள் இல்லை. தங்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தை காட்டும் வழி அது. அவனை விட அதிகம் பாதிக்கப் பட்டவள் அவள்தான், அவன் கவலை அவள் பிரிந்து விடுவாள் என்பது  மட்டும். அவளுக்கோ வீட்டிலும் பேச முடியாமல் அவனையும் மறக்கமுடியாமல் இருதலைகொள்ளியாய் தவித்தாள். வீட்டில் அவர்கள் நிபந்தனைக்கு இவன் தகுதியானவன் இல்லை என்பதை விட அவள் வீட்டிலும் சுற்றத்திலும் வாங்கி வைத்திருக்கும் நல்ல பெயர், அவள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர் மீது உள்ள பாசம் என்பன வீட்டில் அவள்  பேசாமடந்தையாகி கோழையானாள். ஒரு புறம் அவனையும் அவன் காதலையும் மறக்க முடியாமல் ஊமையாக உள்ளுக்குள்ளே அழுதாள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவனின் பரிதவிப்பு அவளை உருக்குலைத்து. அவனாவது அவளிடம் சொல்லி அழுதான். அவளோ யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் தவித்தாள். பெண்ணாக பிறந்ததற்கு இதுவரை பெருமைப் பட்டவள் வாழ்வில் முதன்முறையாக வேதனைப் பட்டாள்.

எல்லா கதைகளுக்கும் முகவுரை இருப்பது போல் முடிவுரையும் உண்டு. சில சிறுகதைகள் ஆகின்றன சில தொடர்கதை ஆகின்றன. இவர்கள் காதலுக்கும் முடிவுரை  எழுதும் நாளும் வந்தது. வழமையாக சந்திக்கும் இடத்தில் நான்கு கண்களும் கண்ணீரோடு சந்தித்துக் கொண்டன. அவள் அடுத்தவாரம் திருமணம் என்று சொன்னாள். அவளை சக்தியை மீறிய ஏற்பாடு அது என்று எவ்வளவோ புரிய வைத்தாள். அவனோ அவளைக் கெஞ்சினான், அவனோடு வாழ ஆயிரம் வழி சொன்னான். எல்லா பாதைகளும் ரோமாபுரிக்கு என்பது போல அவன் சொன்ன வழிகள் எல்லாவற்றையும் தன பெற்றோர் பாசத்தை காட்டி நிராகரித்தாள். கோபமாக சண்டையாக அழுகையாக கெஞ்சலாக காதலாக வெகு நேரம் பேசினார்கள். செத்துப் போவதாக கூட சொன்னான், அவள் கைகூப்பி தடுத்தாள். இருவரும் காதல் வலியால் துடித்தார்கள் வேறு வேறு உணர்வுகளோடு, கூடவே அவளுக்கு குற்ற உணர்ச்சியும் சேர்த்து வதைத்தது. பிரியும் வேளை வந்தது அவள் சொல்லியும் சொல்லாமலும் வந்த பாதைவழியே திரும்பினாள் அவனிடம் கொடுத்த இதயத்தை எடுக்கவும் மறந்து நடைப்பிணமாக... அவனோ இடிவீழ்ந்த மரமாக அவள் போகும் திசையை பார்த்து நின்றான், அவன் இதயத்தை அவள் தூக்கி ஏறிந்து  இவன் காலடியில் போட்டுச்  செல்வதாய் உணர்ந்தான் .....

எதன் மீதோ மோதுவது போல் உணர்வு பெற்று திடுகிட்டான். சுற்றும்முற்றும் பார்த்த போது அவள் ஊர் வந்து விட்டது தெரிந்தது. ஊர் இது என்று  தெரியுமே தவிர அவள் வீடு தெரியாது. இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினான். ஆனாலும் நினைத்த அளவுக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை, யாரிடமும் கேட்கவும் முடியாது. தேடத் தொடங்கினான். இன்னொரு ஆடவனுடன் அவளை நினைத்துப் பார்க்க முடியாமல் தான் இத்தனை காலமும் தவித்தான், ஆனாலும் அவள் வாழ்வியலை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதனை வென்று விட இப்போது அவளை தேடி அவள் ஊரில். ஒரு தெருவில் செல்லும் போது கவனித்தான், தூரத்தில் ஒரு பெண் கையில் சிறு பையுடன் வந்து கொண்டிருந்தாள். மனதுக்குள் மணியடித்தது, தலையை அழகாக சரித்தபடி வருவது அவன் தேவதைதான். மனம் சந்தோசத்தில் துள்ளியது. அதுவும் ஒரு கணம் தான், அருகாமையில் அவளை பார்த்தும் நிலை தடுமாறிப் போனான். ஆண்டவா என்ன கொடுமை இது. அந்த  தேவதை வெள்ளையுடையில் ஒரு விதவையாக அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். என்னாச்சு அவள் கணவனுக்கு, இந்த சிறுவயதில் ஏன் இந்த நிலை. இந்த கோலம் பூணவா என்னையும் விட்டு சென்றாய் என்று அவன் மனம் ஓலமிட்டது. அவனை அவள் பிரிந்து சென்ற வலியை விட இப்போது உயிர் போகும் வலியை உணர்ந்தான். இருந்தாலும் அவளுக்கு என்ன நடந்தது என்று அறிய அவளை அறியாமல் பின் தொடர்ந்து செல்ல தொடங்கினான்.

யாரிடமும் கேட்கவும் முடியாது, கேட்கவும் கூடாது, கேட்டாலும் பதில் கிடைக்காது. அவனாகத்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனாலும் மார்க்கம் அறியாது தயங்கினான். அப்போது அவளை கடந்து இருவர் நேரே வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வெளியூர்க்காரன் மற்றவன் உள்ளூர்க்காரன் போல இருந்தது அவர்கள் பேச்சு. அந்த பேச்சு அவள் தேவதையை பற்றியதாக இருந்தது அவனுக்கு வசதியாக போனது. காது கொடுத்தான். ஒருவன் மற்றவனிடம் "யாருப்பா இந்த பொண்ணு சின்ன வயசில இந்த கோலம், ஆண்டவன் இருக்கானா  இல்லையா" என்று கேட்டான். மற்றவனும் பதிலாக "ஆண்டவனும் இல்லை ஒன்றுமில்லை, இந்த பொண்ணாக செஞ்சிகிட்டது, இந்த பொண்ணுக்கு அவங்க ஆளுங்க நல்ல இடத்துல சம்பந்தம் பேசி, தடபுடலா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணினாங்க, கல்யாணத்துக்கு முத நாள் இரவு இந்த பொண்ணு கத்தி கலாட்டா பண்ணி கல்யாணத்தையே நிறுத்திடுச்சி. அவங்க வீட்டு ஆளுங்க கவுரவம் அந்தஸ்த்து, ஜாதி அது இதுன்னு சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க. இந்த பொண்ணு அதையெல்லாம், தூக்கி எறிஞ்சிட்டு கல்யாணத்தையும் நிறுத்திட்டு அன்னையிலிருந்து இந்த கோலத்துல இருக்குது" என்று சொன்னான். மற்றவனும் விடாமல்" எதுக்காக அப்படி பண்ணிடிச்சி"ன்னான், திரும்பவும்ம்பதில் வந்தது" யாரோ ஒரு பையன காதலிச்சதாம், சம்பவ நைட்டு அவன்கிட்ட இருந்து போன் வந்துதாம்". இதற்கு மேல் அவனுக்கு அவர்கள் பேசிக் கொண்டது கேட்கவில்லை. அப்படியே கல்லாக சமைந்து விட்டான்.

அவனை குற்ற உணர்ச்சி முழுவதுமாக ஆட்கொண்டது. தன் தேவதையின் இந்த நிலைமைக்கு தான் காரணம் என்பது புரிந்தது. அவன் எடுத்த போன் அழைப்பு தான் அவளின் இன்றைய கோலத்துக்கு காரணம். துடித்து விட்டான். ஆனாலும் ஓன்று மட்டும் புரியவில்லை, எந்த அந்தஸ்த்து பாசம் என்று காரணம் காட்டி அவனை விட்டு பிரிந்து  அவனை இந்த நிலைக்கு ஆளாக்கினாளோ, அதே அவனுக்காக அவை அனைத்தயும் தூக்கி எறிந்து இருக்கிறாள். இது என்ன மாதிரி மனநிலை என்று தெரியாமல் குழம்பினான். எது எப்படி இருந்தாலும் தான் செய்த முட்டாள் தனத்தால் தன் தேவதையின் வாழ்வு இப்படியாகி விட்டதே என்பதற்கு அவனிடம் எந்த சமாதானமும் கிடைக்கவில்லை. அன்று போன் பண்ணி தான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொன்னது எவ்வளவு பெரிய விளைவை அவள் வாழ்வில் உண்டாக்கி விட்டது. நினைக்கும் போதே அவன் மீதே அவனுக்கு கோபம் பொங்கியது. செத்து விடலாம் போல் இருந்தது. ஆனாலும் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. அவன்தானே அவள் திருமண நாள் முதல் இரவு போன் பண்ணி அவளுக்கு சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டான்....!




Sunday, August 31, 2014

இது வரையில் மந்திரவாதிகளும் பூசாரிகளும் இதர பேயோட்டுபவர்களும் நம்மை எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்று பார்த்தோம். இந்த பாகத்தில் இவர்களையும் தாண்டி நம் கண் முன்னால் இடம்பெறும் நம் கோட்டு கோபிநாத் சொல்லுவது போல் அனுமாஷ்ய நிகழ்வுகளை பார்க்கலாம். உதாரணமாக:

01. திடிரென்று ஒருவர் பேய்(?) பிடித்து அவர்க்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத மொழி பேசுதல்.

௦2. வழமையான அளவினை விட பலமடங்கு அருவருப்பான பார்ப்போரை பயமுறுத்தும் விதத்தில் ஒருவர் சாப்பிடுதல்


இப்படி பலவகை உண்டு, நான் முந்திய பாகங்களில் சொன்னது போல் இந்த மாதிரி விடயங்களில் மந்திரவாதிகளினதோ, பேயோட்டுபவர்களினதோ தலையீடு எதுவும் இல்லாமல், சாதாரண வாழ்வு வாழும் ஒருவர் திடிரென்று இவ்வாறான செயல்கள் செய்யும் போது நமக்கும் பேய் பிசாசு என்று நம்பிக்கை லேசாக தலைதூக்குவது தவிர்க்க முடியாது. அதற்கும் காரணம் உண்டு நம் தலைமுறையில் சிறு வயதில் உணவுடன் சேர்த்து நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இப்படியான மூட நம்பிக்களையும் ஊட்டி வளர்த்துதிருக்கிரார்கள். நாம் சரியாக சாப்பிடவில்லை என்றால், இந்த கவளத்தை மட்டும் சாப்பிடு இல்லாவிட்டால் பேயை கூப்பிட்டு உன்னை பிடித்துக் கொடுபேன், காட்டேரி வந்து சாப்பிடும் என்றெல்லாம் சொல்லித்தான் உணவுடன் மூட நம்பிக்கைகளையும் ஊட்டி இருக்குறார்கள். சரி இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்கின்றது என்று பார்ப்போம்.



முதலாவது ஒருவர் திடிரென்று தனக்கு பரிச்சயமில்லாத மொழி பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஆங்கில அறிவே இல்லாத ஒருவர் அதனை ஆங்கிலப் படத்தை தவிர வேறு எங்கும் கேள்விப்படாத ஒருவர் ஆங்கிலம் பேசினால் என்னாகும், நாமும் அவரிடம் சென்று தட்சனை வைத்துவிட்டு ஆங்கில பேயிடம் நம்குறைகளை சொல்லி நிவாரணம் தேட வேண்டியதுதான். அவரும் நமக்கு வாழ வழி காட்டுவார். உண்மையில் என்ன நடக்கிறது. அவர் பேசுவதை  ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உற்றுக் கவனித்தால் ஓன்று தெளிவாகும், நாம் என்ன கேள்வி கேட்டாலும் "கைய பிடிச்சி இழுத்தியா" என்கின்ற மாதிரி ஒரே வசனத்தை தான் சொல்லிக் கொண்டிருப்பார், வேறு வேறு ஏற்ற இறக்கங்களோடு ஒவ்வொரு கேள்விக்கும். உண்மையில் அவருக்கு வந்திருப்பது மனநோய், அவரே வைத்திய சிகிச்சை தேவைப் பாடு உள்ள ஒருத்தர். அவரிடம் போய் நாம் நமது நோய்க்கும் நம் கஷ்டங்களுக்கும் வழி சொல்ல கெஞ்சிக் கொண்டிருப்போம். என்னத்த சொல்ல நம் மூட நம்பிக்கையும் அளவை.

நம் மூளையின் நினைவகங்கள் இரண்டு வகைப் படும், வெளிமனது ஆழ்மனது என்று. நம்முடைய நாளந்த நடவடிக்கைகள் வெளிமனதால் நிர்வகிக்க படுகின்றது. அதில் பதியப் படுபவை குறிப்பிட்ட அளவுக்குமேல் சென்றால் அல்லது நாம் அந்த விடயம் சம்பந்தமாக கவனக் குறைவாக இருந்தால் அழிந்து போய்விடும். ஆனால் நம் ஆழ்மனது அப்படியல்ல, நம்முடைய கவனத்திற்கு வராத விடயங்கள் கூட அங்கு பதியப் பட்டு விடும். ஆனால் அது நம்முடைய நாளந்த நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தாது உறக்க நிலையில் இருக்கும். சில வேளைகளில் அது தூண்டலுக்கு உள்ளாகும் போது விழித்து தேவையான தகவல்களை கொடுத்து விட்டு மீண்டும் உறக்க நிலைக்கு சென்று விடும், நாம் சிலநேரங்களில் ஏதாவது தகவல்களை மறந்து விட்டு நெற்றியை அல்லது பின்னந் தலையினை தடவுவது மூலம் ஆழ்மனதினை தூண்டலுக்கு உள்ளாகுகின்றோம். இதனையே வைத்திய முறைகளில் ஹிப்னோடிசம் என்று சொல்லுகிறார்கள். இதனை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் நமக்கு கிறுகிறுத்து விடும் என்பதால் சுருக்கமாக விளங்கக் கூடிய மாதிரி சொல்லியிருக்கிறேன்.


இப்போது மேலே சொன்ன நபர் எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என்பதை பார்ப்போம், நான் நம் மூளையின் நினைவகங்களை பற்றி சுருக்கமாக சொன்னதற்கும் அதற்கும் தொடர்பு உண்டு என்பதால் தான் சிறு விளக்கமாக தந்தேன். மேலே சொன்ன நபர்  பரிச்சயமில்லாத மொழி பேசினாலும், அந்த மொழியினை அல்லது அவர் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளை எங்கோ எதோ ஒரு இடத்தில் அவரை அறியாமல் கேட்டு இருப்பார் அதை அவரின் வெளிமனது கவனத்தில் கொள்ளா விட்டாலும் ஆழ்மனது தெளிவாக பதிந்து வைத்திருக்கும். அந்த நபருக்கு ஏதாவது மன உளைச்சல்கள் அல்லது பாதிப்புக்கள் ஏற்படும் போது அவரது வெளிமனது சோர்வடைந்து தனது இயக்கத்தை குறைத்துக் கொள்ளும், அந்த வேளையில் அவரது ஆழ்மனது விழித்துக்கொண்டு தாறுமாறாக சேமித்து வைத்திருக்கும் தகவல்களை வழங்கும். அதில் இவர் ஏற்கனவே கேட்ட மொழியும் அடங்கும். இதற்க்கு சரியான சிகிச்சையும், மூளைக்கு நிவாரணமும் கொடுக்கும் பட்சத்தில் சரியாகிவிடும், அதை விடுத்து அவரிடம் சென்று நம் எதிர்காலத்தை ஒப்படைத்தால் என்னாகும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

- இன்னும் வரும்

முந்தைய பாகங்களுக்கு : பாகம்01, பாகம்02, பாகம்03, பாகம்04, பாகம்05,  பாகம்06

Thursday, July 10, 2014


மதங்களின் சாத்வீகமும்
மனித நற்பண்புகளும்
கழுத்து நெரிக்கப் பட்டு
பிணங்களோடு பிணங்களாக
அடுக்கப் படுகின்றன
ஒன்றாக...!

ஏற்றப் பட்ட வெள்ளைக்கொடி
இறக்கப்பட்டு கிழிக்கப்பட்டு
போர்த்துகின்றன அவற்றை
பறக்கவிடப் பட வேண்டிய
சமாதனப் புறா 
சட்டியில் கொதிக்கிறது 
இழவுவீட்டு விருந்தாக...!!


எண்ணிக்கையும் போதாது 
எண்ணியதும் தேறாது
என்றதும் பொங்கினர்
கொன்று போட்ட 
மதத்தையும் மனிதத்தையும் 
கூறுபோட்டு விற்க...!!!

எண்ணியதுவும் வேண்டியதுவும்
எல்லையின்றி கிடைத்ததுவும்
கோர முகத்தை மறைக்க 
மத இன முகமூடி மீண்டும்
சாத்தான்கள் வேதத்தை
 தூசு தட்டுகின்றன
நம்பிய பாமரன் மட்டும் 
இன்னும் பிளவுக்குள் 
மீள முடியாமல்...!!!!





பரவசமானேன்



காட்டாமல் மறைத்தாலும்
செல்லமாக காயப்படுத்தினாலும்
நாணந்தான் தடுத்தாலும்
நுகர்ந்து சுவாசிக்கிறேன்
உன் அன்பை........!!


பேசியதும் தெளிவில்லை
பேசாததும் தெரியவில்லை 
மவுனமும் புரியவில்லை
அறியவும் வழியுமில்லை...!!


தாங்காமல் தவிக்கிறேன்
அனல்புழுவாய் தெறிக்கிறேன்
கனவினையும் அழிக்கிறேன்
உன் வார்த்தை பார்த்தே 
கண்கள் பனிக்கிறேன்.....!!


என் வசந்தம் 
வந்து கொண்டிருக்கிறது
வந்தால்தான் தெரியும்
தென்றலா புயலா என்று...?
எதுவாக இருந்தாலும் 
என் சுவாசம் நேர்படும்
அது போதும் எனக்கு.....!!


நீ பேசுகின்ற 
ஒவ்வொரு வார்த்தையும் 
தேனாக இனிக்கிறது 
நீ கோபத்தில்
திட்டுவதையும் சேர்த்து
உன் கோபம் கூட 
என்னிடம்தான் என்பதால் ...!!


புரியாமல் பிரிவதும்
புரிந்த பின் நாணுவதும்
நாணத்துடன் சேர்வதும்
ஊடலின் அழகே.......!!


என் கர்வம் எல்லாம் 
உன் முன்னால்
தகர்ந்து விட்டது
உன் அன்புதான் உயர்ந்தது
ஒத்துக் கொள்கிறேன்
தோல்வியை பெருமையாக..!!


கண்டதும் பரவசமானேன்
பார்த்ததால் அல்ல
தூண்டிய அன்பினால்....!!

Thursday, July 3, 2014

மந்திரவாதிகளின் வாக்கு சாதூரியத்தால் நாம் எப்படி மயங்குகிறோம் என்று இந்த தொடரின் 01ம் பாகத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்குறேன். சில வேளைகளில் நம்மை நம் வாயாலேயே சிக்கலில் மாட்டியும் விடுவார்கள். நம் வீட்டில் உள்ள பொருள், உதாரணமாக தங்கநகை வீட்டில் ஓரிடத்தில் வைத்து விடுவோம். அதுவும் தொலைந்தும் விடும், அந்த நேரம் வீட்டுக்கு வந்த ஒருவரை சந்தேகம் வேறு படுவோம். இருந்தாலும் நாகரீகம் கருதி அவரிடம் கேட்க மாட்டோம். இந்த நேரத்தில் நமக்கு மந்திரவாதியிடம் சென்று குறி சாத்திரம் பார்க்கும் படி ஏற்கனவே மந்திரவாதியிடம் ஏமாந்த ஒருவர் நம்மை உசுப்பேத்தி விடுவார். நாமும் அவரின் ஆலோசனைப் படி மந்திர வாதியிடம் செல்வோம். 



அங்கு போனதும் தான் நமக்கு ஏழரை ஆரம்பிக்கும். எல்லா சடங்கும்(?) முடிந்தபின் சொல்லுவான் தீர்ப்பு நம் குடும்பமே கலங்குகின்ற மாதிரி. "ஒரு ஆள் தான் எடுத்து இருக்கு, ஆனா அதை சொல்லுவதால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பம் வந்து விடும் என்று பயபடுகிறேன்" என்று. நாமும் விட மாட்டோம். யாரென்று சொல்லுங்க என்று மன்றாடுவோம். அவனும்  ரொம்ப பிகு பண்ணிய பிறகு, நம்மிடம் பிரச்சனை படக்கூடாது அது இது என்று சத்தியமெல்லாம் வாங்கி விட்டு வரலாற்று சிறப்பு மிக்க உண்மையை சொல்லுவான். "நீங்கள் மனதில் யாரை நினைத்து இருக்குறீர்களோ அவர்தான்" என்று. நாம் அதற்கு முன்பே சொல்லியிருப்போம் எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருக்கு என்று. அதை வைத்து சரியா பயபுள்ள நம்மை கோர்த்து விடுவான். அதை நாம் நம்பி ஒரு அப்பாவியை பிடித்து வைத்து குமுறுவோம். வீட்டினுள் வந்து போனவன்  சொந்தக்காரனாக வேறு இருந்து விட்டால், குடும்பங்கள் பிரிவதும் உண்டு.



உண்மையில் மேலே உள்ள சம்பவத்தில் மந்திரவாதி செய்தது என்ன? நம்மிடம் போட்டுவாங்கி அவன் வாயால் சொல்லுவான், அதுவும் சர்வ ஜாக்கிரதையாக. நாம் அந்த அப்பாவியை அடித்து பிரச்சனை ஏதும் வந்தால், மந்திரவாதி தப்பி விடுவான். அவன்தான் யார் பெயரையும் சொல்லவில்லையே. சிலவேளை நாம் யாரையும் சந்தேகப் படவில்லை என்று அவன் கண்டு கொண்டால், அப்பவும் நமக்கு அல்வா தான். "உங்கள் வீட்டினில் சதுரமான இடத்தில் தான் அது இருக்கு. மூன்று நாளைக்குள் கிடைத்தால் உங்களுக்கு. இல்லை என்றால் கிடைக்காது" என்று சொல்லி விடுவான். நம் வீடு காணி எந்த இடமும் சதுரம் தான் என்பது நம் மரமண்டைக்கு அப்போது புரியவே புரியாது.   வீட்டினில் வட்டமான ஒரு பானைக்குள் அந்த நகை கண்டுபிடிக்கப் பட்டாலும், அந்த பானை இருந்த இடம் சதுரமான அறை என்று அவன் சமாளிப்பான். பின்னே என்ன, நகை கிடைக்குதோ இல்லையோ, நகையின் பெறுமதியில் அரைவாசியை தட்சணையாக  கொடுத்து விட்டு வீர நடை போட்டு வருவோம்.




முக்கியமாக இதில் ஒரு விடயம், நாம் மந்திரவாதியிடம் போனதும் சடங்கு(?) என்னும் போர்வையில் நமக்கு மூளைச்சலவை செய்வான். முதலில் பழம் ஒன்றின் பெயரை நினையுங்க என்பான்  நாமும் நினைப்போம். சரியாக நாம் நினைத்த  பழத்தின் பெயரை சொல்லுவான், பின் ஒரு பூவின் பெயரை நினைக்க சொல்லுவான். நாமும் நினைப்போம். அதையும் சரியாக சொல்லுவான். இது எப்படி செய்கிறான? . பழம் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, மாம்பழம் அல்லது அப்பிள்தான். பூ என்றால் மல்லிகை அல்லது செம்பருத்தி தான். மற்றது அவன் இருக்கும் இடத்தின் அனுமாஷ்யமும், அவன் செய்கைகளில் நாம் கொண்ட பயபக்தியும், அவனின் பயமுறுத்தும் நடவடிக்கைகளும்  நம்மை சிந்திக்க விடாது. பழம் என்றால் செர்ரி என்றோ  பூ என்றால் தேங்காய்ப்பூ என்றோ சொல்ல நமக்கு தோன்றாது. இது எல்லாவற்றுக்கும் மேலாக டெலிபதி என்னும் கலையும் இங்கு அவனால் பாவிக்கப் படும். அவன் என்ன நினைக்கிறானோ அதையே நம்மையும் நினைக்க தூண்டி விடுவான். அப்புறம் என்ன? நாம் நினைத்ததை அவன் சொல்லி விட்டால், காலம் முழுக்க நாம் அவன் காலடியில் தான்.

-இன்னும் வரும் 

முந்தைய பாகங்களுக்கு : பாகம் 01 பாகம் 02 பாகம் 03 பாகம் 04 பாகம் 05

 

Wednesday, July 2, 2014

ஊடலும் கூடலும்.......! 






ஒன்றுமில்லை என்ற 
ஒத்த வார்த்தையில்
ஓராயிரம் அரத்தங்களை 
ஒளித்து வைத்து விட்டு 
ஓயாமல் என்னை வதைப்பது ஏனோ..........?



உன் பாதி மௌனத்தில் 
மோதி மூக்குடைந்து
கூனிக் குறுகி
நாணத்தில் நான்....!




மூச்சடக்கி முக்குளிக்கிறேன்
உயிர் திணறுகிறது
முத்தைத்தான் காணோம்....!


ஏனடி சொன்னாய்..?
எதற்கு சொன்னாய்..?
என்னை கொல்லவா..?
உயிரை வெல்லவா..?
சட்டென்று சொன்னதால்
திக்குமுக்காடி போனேன் 
காதோடு சொன்னதால் 
பித்தனாக ஆகிவிட்டேன்....!





உள்ளத்தையும் திறந்து விட்டாய்
கள்ளத்தையும் களைந்து விட்டாய்
தோழி நீ சொன்ன காதல்
கொண்டுவந்து சேர்க்கும்
காத்திரு என்னை...!













Sunday, June 29, 2014

சென்ற பாகங்களில் ஒரு மந்திரவாதி நம் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்ற போர்வையில், தன்  தந்திர வித்தைகளாலும் பேச்சு சாதுரியத்தாலும் நம்மை ஏமாற்றி நம் நேரம், பொருள், பணம் என்பவற்றை எல்லாம் எப்படி அபகரிக்கிறான் என்று பார்த்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருந்து மாயம் என்கின்ற போர்வையில் என்னவென்று தெரியாத வஸ்த்துக்களை கொடுத்து, பிற்காலத்தில் நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் அதே வேளையில், மூட நம்பிக்கை என்னும் விதையை  நம் மனதில் ஆழ விதைத்து நம்மை அவனுடைய நிரந்தர வாடிக்கையாளர் வேறு ஆக்கி விடுகிறான்.



சரி, நாம் எப்படி அவனின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் அவன் நம்மை தேடி வருவதில்லை, நாம் தான் அவனை தேடி போய் ஏமாறுகிறோம். இதற்க்கு முக்கிய காரணம், நமக்கு வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு நம் அறிவுக்கு எட்டியவரை நம் கண்முன்னே தீர்வு கிடைக்காத போது தான், இவ்வாறான வழிகளை  தேர்ந்தெடுக்கிறோம், சிலவேளை பரம்பரையாகவும் சிலருக்கு இந்த நம்பிக்கை தொடர்வது உண்டு. இவ்வாறாக நமக்கு சிக்கல்கள் ஏற்படும் போது, நம்மால் தீர்க்க முடியாவிட்டால் நம் மனம் குழம்பி எப்படியாவது தீர்க்க வேண்டும் என்றுதான் என்னுகிறோமே தவிர அதற்குரிய வழிமுறைகளை தேடுவதில்லை. இந்த நேரத்தில் நாம் நம் சொந்தங்களிடம், நண்பர்களிடம் ஆலோசனை செய்யும் போது அவர்களில் யாரவது இந்த மாதிரி மந்திரவாதிகளிடம் ஏமாந்தது கூட தெரியாமல் ஏமாந்து இருந்தால், அவர்களின் சிபாரிசு அந்த மந்திரவாதியாக தான் இருக்கும். நமக்கும் வேறு மார்க்கம் இல்லாது நாமும் ஏற்றுக் கொண்டு விடுவோம்.



இப்போது நமக்கு ஒரு கேள்வி வரும், ஏமாற்றுகின்றான் என்று  நான் சொல்லுகின்ற மந்திரவாதி எப்படி நம் பிரச்சனையை தீர்க்கிறான் என்று. ஊரில் ஒரு விடயம்  சொல்லுவார்கள், ஜலதோஷம் வந்தால் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சுகமடையும், மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாளில் குணமடையும் என்று. அதுதான் மந்திரவாதியின் விடயத்தில் நடைபெறுகிறது. போன பாகங்களில் மந்திரவாதி நம்மை ஏமாற்றுகிறான் என்று நான் குறிப்பிட்ட விடயங்களை எடுத்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பிரச்சனை நம் ஊர் பகுதிகளில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடைகாரருக்கு வந்தது என்று வைத்துக் கொள்வோம். ஊர் பகுதிகளில் ஜவுளி வியாபாரம் என்பது ஏதாவது பண்டிகைகளை வைத்தே நடைபெறும், அதுவும் குறிப்பிட்ட காலங்களில், பொங்கலுக்கு நல்ல வியாபாரம் இடம்பெறும். அவரும் கடனோ உடனோ வாங்கி பொங்கல் வியாபாரம் பார்ப்பார், அதில் வரும் வருமானத்தை பார்த்து கொஞ்சம் பெருசாக ஆசைப் பட்டு அகலக் கால் வைத்தும் விடுவார். பொங்கல் முடிந்ததும், வியாபாரம் அப்படியே படுத்து விடும். இவருக்கு வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி இவரால் சமாளிக்க முடியாமல் போய் விடும். இந்த நேரத்தில் யாருடையாவது ஆலோசனைப் படி மந்திரவாதியை சரணடைவார். அவரும் நான் முந்திய பாகங்களில் சொன்ன மாதிரி வித்தைகளை காட்டி பெரிய அமௌன்ட்டை ஆட்டையப் போட்டுவிடுவார். அவர் அவரது சித்துவேலைகளை காட்டிமுடிவதற்க்கும் தீபாவளி சீசன் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன வியாபாரம் களைகட்டும். இப்போது அந்த ஜவுளிக் கடைக்காரர் என்ன நினைப்பார், இதெல்லாம் தானாக நடந்ததா இல்லை மந்திரவாதியின் திறமையால் நடந்ததா? அப்புறம் என்ன அவரும் இதே போல் நாலுபேரிடம் மந்திரவாதிக்கு சிபார்சு பண்ணி இந்த மூடநம்பிக்கையை வளர்க்க அயராது பாடுபடுவார்.



ஓன்று மட்டும் கவனித்து பாருங்கள், இப்படி ஊர் வாழ்வில் ஒளியேற்றும் மந்திரவாதிகளின் வாழ்வு எப்போதும் அதலபாதளத்திலேயே இருக்கும், விதிவிலக்காக ஓன்று ரெண்டைத் தவிர. ஏன் இவர்களால் இவர்களுக்கே மந்திர வேலைகள் செய்து அவர்களை வளப்படுத்த முடியாதா? ஊருக்குள் குறி  சொல்லும் பழங்குடி மக்கள் நாம் எப்போது கோடிஸ்வரன் ஆவோம் என்று துல்லியமாக கூறுவார்கள். அவர்களுக்கு இரவு சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்று கணிக்க முடியாமல் சோத்துக்கே திண்டாடுவார்கள். சில மந்திரவாதிகள் எலுமிச்சை பழத்தை வெட்டி ரத்தம் எடுப்பார்கள். அவர்களிடம் நீங்கள் "உங்கள் மந்திரத்தை ஒன்றுக்கு ஆயிரம் தடவை உச்சரித்து இப்போ லேட்டஸ்ட்டாக அப்பிள் பழம் ஒன்றை வெட்டி ரத்தம் எடுத்துக்காட்டுங்கள்" என்று சொல்லுங்கள், அவர்களால் அது முடியவே முடியாது. ரத்தம் போல சிவப்பு கலரில் திரவம் எடுக்க எலுமிச்சை பழத்தில் மட்டுமே முடியும், அப்பிள் பழத்தில் தலைகீழாய் நின்றாலும் முடியாது. அதை நீங்களே செய்யலாம். இதற்கு ஆள் எதற்கு.  

-தொடர்ந்து வரும்.

முந்தைய பாகங்களுக்கு: பாகம் ௦1பாகம் 02பாகம் 03பாகம் 04

Tuesday, June 24, 2014

இந்த ஆட்டத்தில் என்னை கோர்த்துவிட்ட Angel Fish அக்கா, நல்லா வருவீங்க 

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?
   

அம்புட்டு நாளைக்கு நான் இருப்பேனா ? இப்போ படுற பாடே பெரும்பாடா இருக்கு போதும்டா சாமி



2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

நிறைய கத்துக்கணும் என்னு நினைக்கேன், என்னனு நினைக்கும் போதுதான் நான் மூணாப்பு பெயிலுங்கிறது ஞாபகம் வருது. என்னத்த சொல்ல.





3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இப்போதுதான், கண்ணாடியில என்னையப் பார்த்து சிரிச்சேன், எதுக்குன்னு தான் மறந்து போயிடுச்சி



4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

அடுத்த நாள் எல்லோரும் செத்தீங்க, ஒரு பத்து குட்டிம்மா கவிதையா எழுதி வெச்சிருந்து அடுத்த நாள் கொலையா கொன்னுட மாட்டேன் 





5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

இத்தனை நாள் எங்களோடு இருந்த உன்னை அடுத்த வீட்டுப் பெண்ணாய் வரும் அந்த நாளில் கண்டிப்பாய் கண்ணீரைத் தவிர வார்த்தை எதுவும் வரப் போவதில்லை எனத் தெரியும் ....

"உனக்காய் அன்பையும் பண்பையும் சீதனமாய் எடுத்துச் செல்கிறாய் மகளே .. உனது புகுந்த வீட்டில் அனைவரிடமும் அன்புடனும் பொறுமையுடனும் கரிசனமாய் இருந்து  அன்பனா சந்தோஷமான ஒரு வீட்டை நிர்வாகிப்பதில் தான் உன் திறமையும் வெற்றியும் ....நல்லதொரு மகளாய் இருந்த நீ சிறந்ததொரு மருமகளாய் இருக்க ஆசிர்வதிக்கிறேன் .."


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

ஜாதியை ஒழித்து பிரதேசவாதங்களை களைந்து மத நல்லிணக்கத்தை உண்டாக்கி உலகம் முழுதும் எல்லோரும் சகல வசதிகளும் சமமாக கிடைக்க முயற்சி செய்வேன்




7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

குட்டிம்மாவிடம், வேறு யாருக்கும் வேண்டும் என்றால் என்னிடம் நிறைய ஸ்டாக் இருக்கு, முற்றிலும் இலவசம்




8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

முன்பென்றால் நிலைமை வேற, இப்போதென்றால் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு பொத்திகிட்டு போவேன் 



9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

ஆறுதல்தான் வேறென்னத்தை சொல்ல  




10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


இப்பவும் அப்படிதான் இருக்கேன், வக்கனையா தின்னுட்டு, முகநூல் அரட்டை




ஷப்பா.......! முடியல. என்னா திட்டம். அக்கா மீ பாவம்

இதனை தொடர்ந்து எழுத நண்பர்கள்,

ரஹீம் கஸாலிகோவை முத்தரசு  ஆகியோரை கோர்க்கிறேன் 





Sunday, June 15, 2014

முந்தைய பாகத்தில், நம்மையும் நம் வீட்டையும் பிடித்த பேயினை மந்திரவாதி எப்படி ஓட்டினார்(?) என்று பார்த்தோம். அப்பிடி ஆட்டையை போட்ட பின், இனி நம்மை அது பிடிக்காமல், நெருங்காமல் பாதுகாப்பு எப்படி கொடுப்பார் என்று பார்ப்போம்.

முதலில் நம்மிடம் சொல்லுவார், ஒரு கிடா ஆடு வேண்டும், அதன் தாயிக்கு இதன் பிறகு குட்டி இருக்கக் கூடாது என்று. நமக்கு தலை சுத்திப் போகும் என்ன சொல்கிறார் என்று புரிய. ஒன்றும் குழம்ப வேண்டாம், தாயில்லாத ஆட்டுக்குட்டியை தான் அப்படி சுத்தலில் விட்டு சொன்னார். நேரிடையாக சொன்னால் நமக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகுமாம். இதைத் தேடி கண்டுபிடிக்கவே நமக்கு கொஞ்சம் நாளாகும், அதற்குள் மந்திரவாதியும் பூஜைக்குரிய ஆயத்தங்களை செய்யத் தொடங்குவார். எப்படியும் ஆட்டை கண்டு பிடித்து கொண்டுபோனால், அதனை காலையில் வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு தலையை மட்டும் எந்த சேதாரமும் இல்லாமல் கொண்டு வந்து தரச் சொல்லுவார், நாமும் அவர் மேல் கொண்ட பாசத்தால் ஆட்டுக் கறியும், தலையையும் மிகவும் பயபக்தியோடு கொண்டு கொடுத்து விட்டு வருவோம். அப்போதே இன்றைக்கு இரவைக்கு பூஜை நடத்த வேண்டும், என்று சொல்லி தலையை வாங்கி வைத்துக் கொள்வார், தண்ணீர் கரையான கடற்கரை, அல்லது ஆற்று ஓரம் லோகேசன் குறித்து கொடுப்பார். அந்த இடத்துக்கு நோயாளியை கொண்டுவரச் சொல்லுவார், பெரும் பாலும் இரவு 10 மணி பிற்பாடு தான் பூஜைக்கு நேரம் குறித்து கொடுப்பார். அவர் சொன்ன படியே நோயாளியும் அவரது  உறவினர்களும், மந்திரவாதி, அவர் சிஷ்யன்களும், பூஜைக்குரிய பொருட்களோடு குறித்த இடத்துக்கு வண்டியில் சென்று இறங்குவார்கள்.



சென்று இறங்கியதும் "இங்க மந்திரம் செய்யும் இடத்தில் சிங்கம், புலி போன்ற பயங்கர உருவங்கள் பயமுறுத்தும், யாரும் பயந்திராதீங்க" அப்படின்னு முத பிட்டை போடுவார். உடனே வந்தவர்களில் வீக்கான பார்ட்டிகள் நாலைந்து பேர் அங்கேயே வண்டிக்கு காவலுக்கு உட்காந்து விடுவார்கள். மிகுதி ஆட்கள் பூஜைக்குரிய இடத்தை அடைவாங்க, அங்கு எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கும், நோயாளியை ஒருபக்கமும் பூஜைப் பொருட்களை மறுபக்கமும் வைத்து விட்டு, நடுவில் ஆட்டுதலையை செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வைத்திருப்பார்கள், பூஜை ஆரம்பமாகும், சிஷ்யர்களில் ஒருவன் கையில் சில கொத்துக்களை வைத்துக்கொண்டு பூச்சி பொட்டுகளை கொஞ்சம் தள்ளி நின்று விரட்டிக் கொண்டிருப்பான். பூஜை உச்ச நிலையை அடையும் போது மந்திரவாதி திடிரென்று கத்துவான், அதோ பாருங்க பேய் சிங்க வடிவில் போகிறது, கரடி வடிவில் போகிறது என்று கரடி விடுவான், அப்போது கூட வந்தவர்களில் ஓன்று ரெண்டு பேருக்கு காலடியில் ஈரம் ஆவது கூட நடக்கும், சிலர் இதுக்கு கூட அசரமாட்டாகள். அப்போது ஆட்டுத் தலைமீது எலுமிச்சம் பழத்தை வைத்து விடுவான் மந்திரவாதி, அப்போது பூச்சி வெரட்டிய சிஷ்யன் கையில் இருக்கும் கொத்தை பூஜை இடத்தில் போட்டுவிட்டு, கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பான். மந்திர வாதியும் ஆட்டின் தலையை வெட்ட கத்தியை மந்திரம் சொல்லிக்கொண்டே ஓங்குவான், நம்பினால் நம்புங்க காலையில் வெட்டிய ஆட்டுதலை கத்தத் தொடங்கும், கத்தும் போதே அதனை ரெண்டாப் பிளந்து விடுவான், பின் உடனே அதனை தண்ணீரிலும் தூக்கி எறிந்து விடுவான். இந்த நேரத்தில் கூட  வந்தவர்களில் பயப்படதாவர் கூட பயத்தில் மயங்கி விடுவார். அவர்களுக்கு அடுத்த நாள் பயப்பாட்டுக்கு தாயத்துக் கட்ட என்று சைட் பிசினெஸ் ஓன்று வேறாக மந்திரவாதியின் வீட்டில் ஓடும் என்பது வேற கதை.



உண்மையில் இது சாத்தியமா, ஆட்டுத்தலை கத்தியதா? அப்படி கத்தவைக்க முடியுமா? பார்ப்போம். ஒருநாளும் இறந்த அல்லது துண்டாக்கப் பட்ட ஒரு தலையை கத்த அல்ல சுயமாக ஒரு அணு கூட அசைய வைக்க யாரலும் முடியாது என்பதை சந்தேகமில்லாமல் நம்புங்கள். பின் எப்படி இது, இப்படித்தான், காலையில் ஆட்டுதலை கொண்டு சென்று கொடுத்ததுமே மந்திரவாதி தன் தந்திர வேலையை ஆரம்பித்து விடுவார். ஒரு உயிருள்ள தவளையை எடுத்து, அடையாளம் தெரியாதபடி ஆட்டின் வாயை பிளந்து அதன் நாக்குக்கு கீழே வைத்து விடுவார், அந்த தவளை கத்தவும் கத்தாது, மந்திரவாதியை காட்டிக் கொடுக்கவும் கொடுக்காது. ஆற்றோரங்களில் "இனித்துள்ளா" எனும் செடி உள்ளது (எங்கள் ஊரில் அதன் பெயர் அதுதான், மற்ற இடங்களில் எப்படி அழைப்பார்கள் என்று தெரியாது). இதன் நாற்றம் தவளைக்கு ஒத்துக்காது, தவளை கத்த தொடங்கும், இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்திற்கு  வாருங்கள். அங்கு பூச்சி பொட்டு வெரட்டிகிட்டு இருந்த சிஷ்யப் பயபுள்ளையின் கையில் இருந்த கொத்து அந்த செடிதான், அதனால் தான் அவன் ஆட்டுதலையை விட்டு தள்ளி போச்சி வெரட்டினான். பூஜையின் உச்சத்தில் அவன் கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பது போல் வந்தது கொத்தை கொண்டுவந்து ஆட்டுதலைக்கு பக்கத்தில் போடத்தான். இப்போது அந்த செடியின் நாற்றம் ஆட்டுதலையின் உள்ளே தூங்கும் தவளைக்கு தொந்தரவாகி கத்தத் தொடங்கும். அப்போதுதான், மந்திரவ்வதி தலையை வெட்டி யாரும் தவளையை கண்டு விடக் கூடாது என்பதற்காக உடனே தண்ணீரில் தூக்கி எறிந்து விடுவான். இப்போ நமக்கு ஒரு கேள்வி வரும், கூட போனவர்களுக்கு ஆடு கத்துவதற்கும் தவளை கத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதா என்று, அதற்க்கு காரணம் உண்டு, தவளைக்கும் ஆட்டுக்கும் சத்தத்தில் கூர்ந்து கேட்டால் தான் வித்தியாசம் விளங்கும், மற்றது அவ்வாறு கூர்ந்து கேட்க முடியாத வாறு தான் மந்திரவாதி  சிங்கம் புலி கரடி விட்டு பயமுறுத்தி வெச்சிருக்கானே, அப்புறம்  எப்படி விளங்கும்.

இப்படித்தான் மக்களே நம்மை ஏமாத்துறாங்க, உண்மையில் வெட்டிய ஆட்டுத்தலை கத்துவது என்பது உலக மகா அதிசயம். அதை ஒருவன் கண்முன்னே செய்து காட்டினால் அவன் நமக்கு கடவுளாக தான் தெரிவான்.

இன்னும் வரும் - 

முந்தைய பாகத்திக்கு :பாகம் 01 பாகம் 02 பாகம் 03


Wednesday, June 11, 2014

வண்ணமான   ஊரும்,
திண்ணமான வாழ்வும், 
மங்காத எம் தமிழு,ம் 
மாறது பெற்ற வேதமும், 
கசடறக் கற்ற கல்வியுமாய், 
நெறிப் பட்டிருந்தோம், 
ஒரு தாய் மக்களாக.....

மேற்கில் சோறு விளையும் சேறும் ,
கிழக்கில் வங்கத் தாய் பொக்கிசமும், 
தெற்கில் வெட்டியுண்ணும் தயிரும், 
வடக்கில் பச்சைகள் யாவும், 
ஊடறுத்து ஓடும் ஆறும் ,
என்ன குறை கண்டோம் ,
எங்கள் மண்ணில்....



ஊருக்கு கல்விக்கு சாலை, 
நாட்டுக்கு சோத்துக்கு ஆலை, 
என்று, வாரி வழங்கி, 
யாவரையும் வளப்படுத்தி, 
நாமும் வளப்பட்டோம்... 

வேரில் ஊற்றிய வெந்நீராய், 
தீயோர் கொண்ட 
தனியாத செயலால் 
யுத்தம் எனும் வன்முறை கொண்டு.
சிதறித்தான் போனோமே!!!
சிந்திக்க மறந்தோமே!!!



தோளில் ஒரு கையும்,
இடுப்பில் ஒரு கையுமாய்,
உயிராய் உறவாடிய,
கண்ணனும் ,காதரும்
இன்றும் சந்திக்கும் வேளையில்,
பார்த்து சிந்திக்கையில்,
இடுப்பையும் கையையும்
ஆயுதம் கொண்டவனோ,
கொல்லத்தான் வந்தவனோ

எங்களுக்கு என்னாச்சு??
சர்வமும் போயாச்சு....
தூரத்தில் தெரியும் ஒளி
வரும் போது வரட்டும்.....
மெழுகுவர்த்தி போதும்
எங்கள் உண்மை முகம் காண...



Tuesday, June 10, 2014

நினைவுகள் மட்டும்......!

பறந்து சென்றாலும் 
விரைந்து மறைந்தாலும் 
என் எண்ணங்களும் 
உன் நினைவுகளும் 
கூடவே பயணிக்கும்......!

நாற்திசையில் எத்திசையோ 
செலுத்தியது எவ்விசையோ 
ஏதொன்றும் அறியேன் 
தொடரும் வழி புரியேன்........!!

கண்காணா தூரத்தில் 
பொழுதறியா நேரத்தில் 
தனிமையில் நீயும் 
வெறுமையில் நானும்.....!!!

எனக்கும் உனக்கும் 
கூடவே நம்காதலுக்கும் 
உரமாகவும் வரமாகவும் 
இறுதிவரை வருவது 
நினைவுச் சிதறல்களே குட்டிம்மா........!!!!






காதலுக்கும் ஆன்மாவிற்கும்.......!


போகிற போக்கில் 
நீ வீசிடும் வார்த்தைகள் 
உனக்கு களிப்பாகலாம் 
உன் மனதை செழிப்பக்கலாம்.......!

நான் கேட்கின்ற  வாக்கில் 
நீ வீசிய வார்த்தைகள் 
என் நெஞ்சை கிழிக்கிறது 
புத்தியையும் தைக்கிறது........!!

தினந்தோறும் சித்திரவதை 
என் காதலால் முடியும் 
ஆன்மாவால் முடியவில்லை 
என் காதலுக்கும் ஆன்மாவிக்கும் 
என்ன பதில் சொல்ல குட்டிம்மா..........!!!


Wednesday, June 4, 2014

பிரிவோடு............!

பிரிவதாக சொல்லிவிட்டு 
இன்னும் என்னுள் 
உறைந்து கிடக்கிறாய் 
உன் நினைவுகளை விட்டு
என்னை அசைய விடாமல்..........!

இது தற்காலிகம் என்றாலும் 
சித்திரவதை கூடத்தில் 
வதை படுகிறேன் 
கைதியாக நான் 
உறைந்து கிடக்கும் 
உன் நினைவுகள் 
எனும் விலங்கோடு .......!

நம்ப முடியவில்லை 
விலங்கும் நானே 
போட்டுக்கொண்டேன் 
சித்திரவதை கூடத்தில் 
எனை நானே ஆளாக்கினேன்..........!

காவலுக்கும் ஆளில்லை 
தப்பிக்கவும் பிரியமில்லை 
இப்படியே போகட்டும் 
கடைசிவரை குட்டிம்மா...........!







மகிழ்வோடு.....! 

உனக்காய் காத்திருந்தும் 
கண்கள் பூத்திருந்தும் 
நீ வரவில்லை...........!

என் கோபம் மேலாடியும் 
உன் மீது வழிந்தோடியும் 
நீ வரவில்லை...........!

நிமிடங்கள் கரைந்து போக 
பொழுதும் விரைந்து ஏக 
நீ வரவில்லை...........!

நெஞ்சம் தவிதவிக்க 
உன் எண்ணம் பரிதவிக்க 
நீ வரவில்லை...........!

இத்தனை எனை ஆட்கொண்டும் 
சித்தனைப்போல் கால் கொண்டும் 
நீ வரவில்லை...........!

பகலவனை கண்ட 
பனித்துளி அறியேன் 
தாயினைக் கண்ட 
மழலையின் மகிழ்ச்சி அறியேன் 
தேன் மலர் கண்ட 
வண்டின் மனம் கூட அறியேன் 
அத்தனையும் உணர்ந்து கொண்டேன் 
தாமதித்தில் நீ கேட்ட 
மன்னிப்பில் குட்டிம்மா..........!

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!