Sunday, June 15, 2014

முந்தைய பாகத்தில், நம்மையும் நம் வீட்டையும் பிடித்த பேயினை மந்திரவாதி எப்படி ஓட்டினார்(?) என்று பார்த்தோம். அப்பிடி ஆட்டையை போட்ட பின், இனி நம்மை அது பிடிக்காமல், நெருங்காமல் பாதுகாப்பு எப்படி கொடுப்பார் என்று பார்ப்போம்.

முதலில் நம்மிடம் சொல்லுவார், ஒரு கிடா ஆடு வேண்டும், அதன் தாயிக்கு இதன் பிறகு குட்டி இருக்கக் கூடாது என்று. நமக்கு தலை சுத்திப் போகும் என்ன சொல்கிறார் என்று புரிய. ஒன்றும் குழம்ப வேண்டாம், தாயில்லாத ஆட்டுக்குட்டியை தான் அப்படி சுத்தலில் விட்டு சொன்னார். நேரிடையாக சொன்னால் நமக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகுமாம். இதைத் தேடி கண்டுபிடிக்கவே நமக்கு கொஞ்சம் நாளாகும், அதற்குள் மந்திரவாதியும் பூஜைக்குரிய ஆயத்தங்களை செய்யத் தொடங்குவார். எப்படியும் ஆட்டை கண்டு பிடித்து கொண்டுபோனால், அதனை காலையில் வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு தலையை மட்டும் எந்த சேதாரமும் இல்லாமல் கொண்டு வந்து தரச் சொல்லுவார், நாமும் அவர் மேல் கொண்ட பாசத்தால் ஆட்டுக் கறியும், தலையையும் மிகவும் பயபக்தியோடு கொண்டு கொடுத்து விட்டு வருவோம். அப்போதே இன்றைக்கு இரவைக்கு பூஜை நடத்த வேண்டும், என்று சொல்லி தலையை வாங்கி வைத்துக் கொள்வார், தண்ணீர் கரையான கடற்கரை, அல்லது ஆற்று ஓரம் லோகேசன் குறித்து கொடுப்பார். அந்த இடத்துக்கு நோயாளியை கொண்டுவரச் சொல்லுவார், பெரும் பாலும் இரவு 10 மணி பிற்பாடு தான் பூஜைக்கு நேரம் குறித்து கொடுப்பார். அவர் சொன்ன படியே நோயாளியும் அவரது  உறவினர்களும், மந்திரவாதி, அவர் சிஷ்யன்களும், பூஜைக்குரிய பொருட்களோடு குறித்த இடத்துக்கு வண்டியில் சென்று இறங்குவார்கள்.



சென்று இறங்கியதும் "இங்க மந்திரம் செய்யும் இடத்தில் சிங்கம், புலி போன்ற பயங்கர உருவங்கள் பயமுறுத்தும், யாரும் பயந்திராதீங்க" அப்படின்னு முத பிட்டை போடுவார். உடனே வந்தவர்களில் வீக்கான பார்ட்டிகள் நாலைந்து பேர் அங்கேயே வண்டிக்கு காவலுக்கு உட்காந்து விடுவார்கள். மிகுதி ஆட்கள் பூஜைக்குரிய இடத்தை அடைவாங்க, அங்கு எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கும், நோயாளியை ஒருபக்கமும் பூஜைப் பொருட்களை மறுபக்கமும் வைத்து விட்டு, நடுவில் ஆட்டுதலையை செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வைத்திருப்பார்கள், பூஜை ஆரம்பமாகும், சிஷ்யர்களில் ஒருவன் கையில் சில கொத்துக்களை வைத்துக்கொண்டு பூச்சி பொட்டுகளை கொஞ்சம் தள்ளி நின்று விரட்டிக் கொண்டிருப்பான். பூஜை உச்ச நிலையை அடையும் போது மந்திரவாதி திடிரென்று கத்துவான், அதோ பாருங்க பேய் சிங்க வடிவில் போகிறது, கரடி வடிவில் போகிறது என்று கரடி விடுவான், அப்போது கூட வந்தவர்களில் ஓன்று ரெண்டு பேருக்கு காலடியில் ஈரம் ஆவது கூட நடக்கும், சிலர் இதுக்கு கூட அசரமாட்டாகள். அப்போது ஆட்டுத் தலைமீது எலுமிச்சம் பழத்தை வைத்து விடுவான் மந்திரவாதி, அப்போது பூச்சி வெரட்டிய சிஷ்யன் கையில் இருக்கும் கொத்தை பூஜை இடத்தில் போட்டுவிட்டு, கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பான். மந்திர வாதியும் ஆட்டின் தலையை வெட்ட கத்தியை மந்திரம் சொல்லிக்கொண்டே ஓங்குவான், நம்பினால் நம்புங்க காலையில் வெட்டிய ஆட்டுதலை கத்தத் தொடங்கும், கத்தும் போதே அதனை ரெண்டாப் பிளந்து விடுவான், பின் உடனே அதனை தண்ணீரிலும் தூக்கி எறிந்து விடுவான். இந்த நேரத்தில் கூட  வந்தவர்களில் பயப்படதாவர் கூட பயத்தில் மயங்கி விடுவார். அவர்களுக்கு அடுத்த நாள் பயப்பாட்டுக்கு தாயத்துக் கட்ட என்று சைட் பிசினெஸ் ஓன்று வேறாக மந்திரவாதியின் வீட்டில் ஓடும் என்பது வேற கதை.



உண்மையில் இது சாத்தியமா, ஆட்டுத்தலை கத்தியதா? அப்படி கத்தவைக்க முடியுமா? பார்ப்போம். ஒருநாளும் இறந்த அல்லது துண்டாக்கப் பட்ட ஒரு தலையை கத்த அல்ல சுயமாக ஒரு அணு கூட அசைய வைக்க யாரலும் முடியாது என்பதை சந்தேகமில்லாமல் நம்புங்கள். பின் எப்படி இது, இப்படித்தான், காலையில் ஆட்டுதலை கொண்டு சென்று கொடுத்ததுமே மந்திரவாதி தன் தந்திர வேலையை ஆரம்பித்து விடுவார். ஒரு உயிருள்ள தவளையை எடுத்து, அடையாளம் தெரியாதபடி ஆட்டின் வாயை பிளந்து அதன் நாக்குக்கு கீழே வைத்து விடுவார், அந்த தவளை கத்தவும் கத்தாது, மந்திரவாதியை காட்டிக் கொடுக்கவும் கொடுக்காது. ஆற்றோரங்களில் "இனித்துள்ளா" எனும் செடி உள்ளது (எங்கள் ஊரில் அதன் பெயர் அதுதான், மற்ற இடங்களில் எப்படி அழைப்பார்கள் என்று தெரியாது). இதன் நாற்றம் தவளைக்கு ஒத்துக்காது, தவளை கத்த தொடங்கும், இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்திற்கு  வாருங்கள். அங்கு பூச்சி பொட்டு வெரட்டிகிட்டு இருந்த சிஷ்யப் பயபுள்ளையின் கையில் இருந்த கொத்து அந்த செடிதான், அதனால் தான் அவன் ஆட்டுதலையை விட்டு தள்ளி போச்சி வெரட்டினான். பூஜையின் உச்சத்தில் அவன் கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பது போல் வந்தது கொத்தை கொண்டுவந்து ஆட்டுதலைக்கு பக்கத்தில் போடத்தான். இப்போது அந்த செடியின் நாற்றம் ஆட்டுதலையின் உள்ளே தூங்கும் தவளைக்கு தொந்தரவாகி கத்தத் தொடங்கும். அப்போதுதான், மந்திரவ்வதி தலையை வெட்டி யாரும் தவளையை கண்டு விடக் கூடாது என்பதற்காக உடனே தண்ணீரில் தூக்கி எறிந்து விடுவான். இப்போ நமக்கு ஒரு கேள்வி வரும், கூட போனவர்களுக்கு ஆடு கத்துவதற்கும் தவளை கத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதா என்று, அதற்க்கு காரணம் உண்டு, தவளைக்கும் ஆட்டுக்கும் சத்தத்தில் கூர்ந்து கேட்டால் தான் வித்தியாசம் விளங்கும், மற்றது அவ்வாறு கூர்ந்து கேட்க முடியாத வாறு தான் மந்திரவாதி  சிங்கம் புலி கரடி விட்டு பயமுறுத்தி வெச்சிருக்கானே, அப்புறம்  எப்படி விளங்கும்.

இப்படித்தான் மக்களே நம்மை ஏமாத்துறாங்க, உண்மையில் வெட்டிய ஆட்டுத்தலை கத்துவது என்பது உலக மகா அதிசயம். அதை ஒருவன் கண்முன்னே செய்து காட்டினால் அவன் நமக்கு கடவுளாக தான் தெரிவான்.

இன்னும் வரும் - 

முந்தைய பாகத்திக்கு :பாகம் 01 பாகம் 02 பாகம் 03


4 comments:

  1. வித்தியாசமான புதிய தகவல்கள்! விளக்கங்கள்! அருமை! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே வரவிற்கும் கருத்திக்கும்

      Delete
  2. அண்ணே தொடர்ந்து எழுதுங்க .....மந்திரவாதி கூட உமக்கு என்ன்னய்யா வேலை? கூட இருக்காம இதுல்லாம் தெரியாதே ..

    ReplyDelete
    Replies
    1. எதையும் ஆராயணும் அப்போதான் தெளிவு கிடைக்கும், மந்திரவாதியின் மகன் பிரண்டு போட்டுக்கொடுத்திடான்

      Delete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!