Monday, October 26, 2015


அகம் புறம் (குறும்படம்)



ஒரு  விடயத்தில் இரண்டு  வகை  பிரமிப்பு  உண்டாகும்,  நம்மால்  முடியாத  விடயம் நடந்தேறும்  போதும் , அதை  இன்னொருவர்  விடா முயற்சியுடன்  நடத்தி  முடிக்கும்  போதும். அந்த  இரண்டு வகை  பிரமிப்பும்  ஒருசேர  என்னால்  உணர்ந்து  கொள்ள  முடிந்தது,  இந்த  "அகம் புறம்" குறும் படத்திலும்,  அந்த  படத்துக்காக உழைத்த  குழுவினரை  பார்க்கும்  போதும். குறிப்பாக  அந்த  குறும் படத்தின்  இயக்குனர் குடந்தை ஆர். வி.  சரவணனின்  அபார  முயற்சியினை  பாராட்டாமல்  இருக்க  முடியவில்லை.  கூடவே  அவருக்கு  தோள்  கொடுத்த  அவரது  குழுவினருக்கும் எனது  பாராட்டுக்கள். இதில்  மிக  முக்கியமாக  குறிப்பிட  வேண்டியது  இவர்கள்  அனைவரும்  எனது  நேரடி  நட்பில்  உள்ளவர்கள்  என்பது  எனக்கும் பெருமையே. ஆனால்  இந்த  பாராட்டு  எல்லாம்  அவர்களது  இந்த  முயற்சிக்கு  தான். வாங்க  அந்த  முயற்சியில்  என்ன  பண்ணி  இருக்குறாங்கன்னு  பார்த்திட்டு  கழுவி  ஊத்தலாம். முக்கியமாக  ஒன்னு  சொல்லனும்,  விமர்சனம்  என்னதும் ஏதோ  நான்  சினிமாவை  கரைத்து  குடித்த  மேதாவின்னு  தப்பா  நினைச்சிராதீங்க.  இன்னைய  வரைக்கும்  நான்  தரை டிக்கெட்டு  ரசிகன் தான். 



முதலில்  நல்லவைகளை  பாராட்டி  பேசலாம், படத்தின்  கரு  வெங்காயம்ன்னு  சொல்லலாம். இல்லாத  ஒன்னுக்கு  சந்தர்ப்ப  சூழ்நிலைகள்  எப்படி  காரணங்ககள்  கற்பிக்கின்றன  என்பதனை  அழகாக  சொல்லி  இருக்குறார்கள்.  தெளிவான  நெறியாள்கை,  ஒளிப்பதிவும்  இசைக்  கோர்ப்பு  என்று  சகல  பக்கமும்  அதகளம்  பண்ணி  வைத்திருக்கிறார்கள், வசனங்கள்  டைமிங்  காமடியில்  சூடு  பறக்கிறது. அதிலும்  முகபாவங்கள்  முடிந்தளவு  வசனங்களுடன்  ஒன்றிப்  போக  வைப்பதில்  இயக்குனர்  பாஸாகி  இருக்குறார், அண்ணன்  குடந்தை  சரவணன் முழுநீள  திரைப்  படத்துக்கு  தயாராகி  விட்டார்  போல்  தெரிகிறது. வாழ்த்துகள்.



  அடுத்து  அண்ணன்  துளசிதரன் பின்னி  பிடலெடுத்து  இருக்குறார். பெரிய மனுசன்னா  இப்படி  இருக்கனும் என்னு  படம்  முழுக்க  வலம்  வருகிறார்.  பாலகணேஷ்  அண்ணன்  நிச்சயமா  போலிஸ்  வேலையில்  இருந்திருக்க  வேண்டியவர் ,  அண்ணே  மீசைதான்  ஒட்டல. அடுத்து  அரசன்,  உட்காந்த  இடத்திலேயே  படத்தை  தூக்கி  நிறுத்தி  இருக்கிறார். டைமிங்  காமடி  முடியல,  அதிலும்  "இதுக்கு நீ குப்பை  தொட்டிக்கே   வணக்கம்  வெச்சி  இருக்கலாம் ",  "துருப்  புடிச்ச  மாதிரியே  இருக்கே" எப்படியா  சிரிக்காம, அரசன்  அக்மார்க். கொஞ்சம்  அழுத்தி  பிடித்தால்  தமிழ்  சினிமாவுக்கு ஒரு  அழகான  ப்ளக் சொக்கலேட்  பேபி  கிடைக்க  வாய்ப்பிருக்கு.    



கோவை  ஆவி,  ஒரு சிறந்த  நடிகனை  அதுவும் அப்பாவியாக  முகத்தை வைத்துக்  கொண்டு   ஒருவரை  சினிமா  உலகம்  இதுவரை  பயன்படுத்தாமல்  இருப்பது  சினிமா  உலகுக்கே  நஷ்டம். கார்த்திக்  சரவணன், எங்கள்  ஸ்பை,  சிரிக்க  மாட்டார்ன்னு  சொன்ன  ஆளைத்தான்  தேடுகிறேன், தானும்  சிரித்து  நம்மையும்  சிரிக்க  வைத்திருக்கிறார்.  இன்னும்  ரெண்டு  படம்  நடித்தால்,  வாகை  சந்திரசேகர்,  நாசர்  போன்றவர்களின்  இடத்தை  நிரப்ப சான்ஸ்  இருக்கு. ஆரூர்  மூனா கிட்ட  ஒரு  கேள்வி,  "இதுக்கு  முன்னாடி  நீங்க  பாம்பேயில  என்ன  பண்ணிட்டு  இருந்தீங்க,?  கமான்  டெல்  மீ,  நாடி  நரம்பு  ரத்தம்  எல்லாத்திலையும்  இந்த  ரௌடித்தனம்  ஊறிப்  போன  ஒருத்தனால  தான்  இப்படி  முடியும்".



அடுத்து  படத்தில்  நடித்த  வாண்டுகள்,  முடியல  படத்தின்  ஆணிவேர்கள்  அவர்கள்  தான்.  அதிலும்  ரக்சித் கார்த்திக்  சரவணன்,  இந்த பையனை  பார்க்கும்  போது, "ஒரு  நாயகன்  உதயமாகிறான்" என்கிற  பாட்டுதான்  ஞாபகம்  வருகிறது.  பையன்  கமிரா முன்னாடி  நடிக்கிறோம்  என்பதையே  மறந்து  விளையாடி  இருக்குறான்,  கூடவே  மற்ற  குழந்தை  நட்சத்திரங்களும்  இயல்பாக  நடித்து  இருக்குறார்கள். மொத்தத்தில்  படத்தில்  நடித்தவர்கள்  எல்லோரும்  கமெராவினை  கணக்கில்  எடுக்காமல்  இயல்பாக  நடித்து  இருப்பது  மன  நிறைவு.



இப்போ  குறைகள்ன்னு  பார்த்தால்,  படத்தில்  அப்பட்டமாக  தெரிவது  எடிட்டிங்  எனும்  படத்  தொகுப்பு. கொஞ்சம்  எடிட்டிங்  டேபிளில்  இருக்கும்  கத்தரியை  சாணை  பிடித்துக்  கொண்டு  வந்து  படத்தினை  வெட்டி  தொகுத்து  இருக்கலாம்.  அவ்வளவு  மொட்டை  அந்த  கத்தரி.  படத்தினை  எடிட்  செய்தவர், இயக்குனர்  காட்சிக்கு  காட்சி   "ஸ்டார்ட் கமிரா, ஆக்சன்" என்று  சொன்னதையும்  படத்தில்  வரும்  வசனம்  என்று  நினைத்து  விட்டார்  போல்  இருக்குறது. அதில்  இயக்குனரும்  கவனம்  சிதறி  இருக்குறார்.  அடுத்து  படத்தின்  திரிலிங் காட்சி  அமைப்பில்   எனக்கு  அவ்வளவு  திருப்தி  இல்லை,  என்னவோ  குறை,  கடைசிக்  காட்சியில்  அதனை  திருப்திகரமாக  செய்யவில்லை  என்றே  தோன்றுகிறது. ஆனால்  என்ன  குறை என்று  சொல்ல  எனது  சினிமா  அறிவுக்கு  தெரியவில்லை.  அடுத்து  முக  பாவனைகளில்  கொஞ்சம் நடிகர்களை  வேலை  வாங்கி  இருக்கலாம்.  மற்றும்  படி  இந்த  முயற்சி  என்னளவில்  இமாலய  முயற்சி.  வாழ்த்துக்கள்.

படத்தினை  பார்த்து  மகிழ்ந்திட:



டேய் ,  படத்தை  விட  உன்னோட  விமர்சனம்  நீளமா இருக்கேடா  என்று  உங்க  மைன்ட் வாயிஸ்  சொல்வது  எனக்கு  இங்க  வரைக்கும் கேட்கிறது. என்ன  பண்ண  இவர்களது  இமாலய  முயற்சிக்கு  என்னுடைய  சிறிய  ஊக்குவிப்பு. 




  

Sunday, March 15, 2015







நேற்றிரவும்  ஒரு கனவு 
நான்  மரணித்து விட்டதாக
என்  உடலில்  இருந்து 
உயிர் வெளியே  இழுக்கப்பட்டு
பிய்த்து  எறியப்பட்டது
வலியும்  கதறலுமாய் 
செய்வதறியாது நான்.........!


உற்றமும்  சுற்றமும்
கூடி நின்று  அழுதார்கள்
விரைவில்  மறந்து  விடுவார்கள்
அவரவர் அன்பிற்கேற்ப
நாட்களில்  வாரங்களில்
மாதங்களில்  வருடங்களில்
எனக்கு  மட்டும் ...............??


காரியங்கள்  ஆகின
கடமைகள்  தொடர்ந்தன
குளிப்பாட்டி  வெள்ளாடை
அணிவிக்கப்  பட்டு கிடத்தப்பட்டேன்
கூடவே  பொய்யான 
புகழ் மாலைகளும் அதிகப்படியாக 
கடைசியில் நடந்தே  விட்டது 
அந்த  நாலு  பேரும்......!!!




மரணக்  குழிக்குள்
தள்ளியே  விட்டனர்
உள்ளே நானும்  என் உடலும்
இருட்டு  தனிமை  வெம்மை 
தனித்  தனியாக  கண்டவை
புதுமையாக  ஒன்றாக 
ஆனாலும்  தாங்க முடியாதவாறும்
மீள  முடியாதவாறும்.....!!!!


துர்நாற்றமும்  கூடவே
ஊனமும்  வழிந்தோடியது
என்னில்  இருந்து
எனக்கே  சகிக்காதவாறு
எனக்குள்ளே  என்னையறியாமல்
நான்  வளர்த்த "லார்வாக்கள்"
என்னை  தின்று  முடிக்க
தீராத  பசியுடன்
என்னை  சுற்றி.......!!!!!


சட்டென  விழித்ததில்
தடுமாறிப்  போனேன்
சுற்றும்  முற்றும்  பார்த்தேன்
எனது  அறைதான் 
உற்று  நோக்கினால்  எங்கெங்கினும் 
அழகுசாதனங்கள் முத்திரை  ஆடைகள்
நவீனத்தால்  இறைந்து  இருந்தது
நாளைய  நிகழ்வுகளுக்கு  
திட்டம் தீட்டியபடி  
மீண்டும்  உறக்கத்தில்  நான்.......!!!!!!















Wednesday, February 25, 2015

ஊரிலோ  அரச உத்தியோகம்,  ஆனாலும்  மூன்றம் மண்டல நாடுகளின் தலைவிதிக்கு ஆட்பட்டு  பொருளாதார சரிவு அவனுக்கும்  சரிசெய்ய முடியாதபடி. அதனால் தான்  சம்பளமற்ற விடுமுறையில்  வேலையை  தூக்கி  எறிந்து  விட்டு வளைகுடா நாட்டை  நோக்கி பொருளாதார  போர்  தொடுக்க  படையெடுத்தான். அங்கு  செல்லும்  முன்பே  ஏகப்பட்ட  கனவுகள். உள்ளூர்  தொழிலில் கிடைத்த  மரியாதையும்  புகழும், வெளிநாடு  வரை பரவி இருக்கும். விமானம்  இறங்கியதும் விமான நிலைய  வாசலிலே  அரபு  நாட்டு முதலாளிகள் தன்னை  வரவேற்பார்கள், தொழில்  கொடுக்க போட்டி போடுவார்கள் என்ற  மனப்  பால்  குடித்த படி விமானம்  ஏறினான். இறங்கியதும்  தான் சுள்ளென்ற  அந்த  பாலைவன  வெயிலும்  வெம்மையும்  அவன் கனவை  சுட்டெரித்தன...!



இருந்தாலும்  தளரவில்லை,  பை நிறைய  சுயவிபரக்  கோவைகளை  நிரப்பிக் கொண்டு  வீதி  வீதியாக  தொழில்  வேட்டையில்  இறங்கினான். ஒவ்வொரு  தொழில்  நிலையமாக  ஏறி  இறங்கியதுதான்  மிச்சம். நடக்கையில்  தலையில்  இருந்து  வியர்வை வடிந்து  கண்ணில்  பட்டு  எரிச்சலாக  இருக்கும்.  கூடவே  கண்ணீரும். அது எரிச்சலால்  வந்த  கண்ணீரா  இல்லை வேதனையின்  ஊற்றா? இதுவரை  புரியவில்லை.....!!


இப்படியே  ஆறுமாதம்  வெட்டியாக  ஆனால்  ரொம்ப  பரபரப்பாக  ஓடியது. ஏற்கனவே  இருந்த  கடன் தொகையில்  பக்கத்தில்  ஒரு  பூச்சியமும்  சேர்ந்து  படாத பாடு படுத்தி  தூக்கத்தையே  தொலைக்க  வைத்தது. ஒருவாறாக  அடித்துபிடித்து  பொன்னை வைக்கும் இடத்தில்  பூவைப்போல்  அடிமாட்டு  சம்பளத்திற்கு  ஓரிடத்தில்  வேலைக்கு  சேர்ந்தான். அடுத்த  ஆறுமாத  உழைப்பை  கடன்  ஏப்பம்  விட கையில்  ஏதுமில்லாத சூழல்.இந்நிலையில்  ஊரில்  இருக்கும்  வரை  சின்ன ஜலதோஷம்  கூட  வந்து பார்த்திராத  உயிரான  தந்தையின்  திடீர்  மரணம். உருக்குலைந்து  போனான்.......!!!

ஊருக்கு  போயாக  வேண்டிய  சூழல்,  ஆனால்  போவதற்கு  உள்ள ஒரே  காரணம்  தந்தையின்  மரணம்  மட்டுமே,  ஆனால்  போக  முடியாது என்பதற்கு  பல  காரணங்கள்  முன்னாடி  இருந்தன. வேலையில்  சேர்ந்த  புதிது, கையில்  பணமில்லை,  சீராட்டி  பாராட்டி  உயிரா  வளர்த்த  தந்தையின்  இறுதிச் சடங்கு  செலவு  என்று.  வேலை  செய்யும் இடத்தில்  வாங்குவது என்றால்  அவர்கள் அவனை   அதை நம்பி  கொடுப்பார்கள். வாங்கிக்  கொண்டு  போய்  விட்டு  திரும்பி  வாராவிட்டால்  யாரிடம்  கேட்பது  என்பது  அவர்கள்  கவலை.  அவன்  கவலை  அவனுடைய   தந்தை. ஒரே  ஒரு வழிதான்  இல்லை வலிதான்  இருந்தது.  அவனை  அங்கு  அடகு  வைத்து  பணம்  வாங்கி ஊருக்கு அனுப்பினான் தந்தையின்  இறுதிச்  செலவுக்கு....!!!!




பணத்தை  அனுப்பி  விட்டு  உயிர்  கொடுத்தவன்  உயிரற்ற  உடலை  கடைசியாக  பார்க்கவும் விதியில்லாமல்,  சத்தம்  போடாமல்  ஓலமிட்டுக் கொண்டிருந்தான் தேற்றவும்  ஆளில்லாமல்  சபிக்க பட்டவன்.........!!!!!

சுயம் தொடரும்......!!

 

Sunday, October 26, 2014


எல்லோரும் தமது திரைப்பட வாழ்வை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்குவது என்ற மரபிற்கு ஏற்ப நானும் எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை  துணை நிற்க .....!



நாம நேரா விசயத்துக்கே போயிடுவோம் முதல்ல இந்த படத்திற்கு சிலநொடி சிநேகம் என்பதுக்கு பதிலாக முயலும் ஆமையும்ன்னு பெயர் வெச்சிருக்கலாம். ஏன்னா படத்துல வருகிற ரெண்டு நாயககர்களும் அப்படித்தான் இருக்காங்க, உருவத்திலையும் சரி பாத்திரப் படைப்பிலும் சரி. ஆனாலும் இயக்குனர் நாயகர்கள் ரெண்டு பேர்லயும் இருக்குற தனிப்பட்ட கோவத்தை வைத்து இப்படி பழிவாங்கி  இருக்க வேணாம்ன்னு நம்ம விமர்சனக் குழு கருதுது. பின்ன என்னங்க எட்டு நிமிசப் படத்துல ரெண்டு நாயகர்ளையும் அஞ்சு  நிமிசத்துக்கு மேல வெயில்ல நடக்க விட்டு வாட்டி வதக்கி இருக்காரு. அதிலயும், நாயகன் ஆவிக்கு அவர் ஒரு டச்சப் பாய் கூட வைத்துக் கொடாமல் வியர்க்க விறுவிறுக்க நடிக்க விட்டதை பார்க்கும் போது இயக்குனர் மேல் கண்டனக் கூட்டம் போட்டு கண்டிக்க நினைத்தாலும், ஆவி கெட்ட கேட்டுக்கு இது போதும் என்கிற இயக்குனரின் மைன்ட்வாயிஸ் நமக்கும் கேட்பதால் மன்னித்து விடுகிறோம். இணை நாயகன் அரசன் ஸ்ட்ரைட்டா கதாநாயகன் என்கின்ற ரேஞ்சில் இயக்குனரிடம் கெஞ்சிக் கூத்தாடி இருக்குறார் என்பதை படத்தில் இயக்குனர் ஒஞ்சி  நிற்பது  காட்டிக் கொடுக்கிறது.



இதையெல்லாம் விட்டுவிட்டு போகலாம் என்றால், இன்றைக்கு குறுந்திரை நாயகன், நாளை வெள்ளித்திரை நாயகன், அப்புறம் ரசிகர் மன்றம், பிக்காளி சூப்பர்ஸ்டார், சுண்ணாம்பு திலகம் அப்புறம் தமிழ்நாட்டின் தலைவிதிக்கு ஏற்ப முதல்வர் கனவு என்று நாயகர்கள் இருவரும் மனப் பால் குடித்தது கடைவாய் வழியே வழிந்திருப்பது காட்டிக் கொடுக்கிறது. இதுக்கும் நாம்தான் விமர்சனம் எழுதணும் போஸ்டர் ஓட்டனும் என்கிற கொடுமையை நினைக்கும் போது தான் தாங்க முடியல.


ஜோக் ஒப் த பார்ட்டை இத்துடன் நிறுத்திவிட்டு..................!




இயக்குனராக பரிணாமம் எடுத்திருக்கும் நண்பர் குடந்தை ஆர். வி. சரவணனுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். முதல் முயற்சி போலில்லாமல் தேர்ந்த ஒரு திறமை படத்தில் தெரிகிறது. முதல் படமே வெளிக்களத்தில். காட்சிகளில் வழிப்போக்கர்கள் உட்பட எல்லோரும் இயல்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டதில் அவரின் நெறியாள்கை தெரிகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத கதை தேவையான இடத்தில் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள். வாழ்த்த தோணவில்லை, கற்றுக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக கதைக்கு ஏற்றமாதிரி நாயகர்கள்,   பாத்திரத்துடன் ஒன்றிப் போன மாதிரி ஒரு உருவ மைப்பு ரெண்டு பேருக்கும்.


அரசன், நம்மை தினசரி கடந்து செல்லும் சாதாரண இளைஞ்சனின் உருவம், குறும்படம் என்று ஏனோ தானோ என்றில்லாமல் பாத்திரத்துடன் ஒன்றித்துப் போனது போன்று இருந்தது. வசனங்களில் சரியான தெளிவு. ஆவி, மத்தியதர மனிதனின் தோற்றம் அவரின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது. வசன உச்சரிப்புக்களில், நடிப்பில் அரசனுக்கு சரியான போட்டி. 




வாழ்த்துக்கள் நண்பர்களே, இதுபோன்று புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Saturday, September 20, 2014

அவன் புறப்பட்டு விட்டான்,அவள் ஊருக்கு........ அவளைப் பார்க்க பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்பயணம்.... திடீர் ஞானம் வந்து புறப்படவில்லை, இது வரை போகாமலிருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்க்கும் தைரியமில்லை என்பது தான் முக்கியமானது. ஆனால் இப்போது தயக்கத்தை ஆவல் வென்றுவிட காலமும் கைகோர்க்க கிளம்பி விட்டான். பயணம் என்னவோ முன்னோக்கி இருந்தாலும் சிந்தனை மட்டும் பின்னோக்கி சென்று கொண்டிருந்து.

அவன் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது, மேட்டில் ஏறியதை விட பள்ளத்தில் வீழ்ந்ததே அதிகம், சொந்தபந்தப் பிணைப்பு இன்றி தன்னந்ததனியாக வாழப் பழகியவன். அந்த அரவணைப்புக்கு ஏங்கியவன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்  பாதையில் சென்றவன். பாசங்களில் நம்பிக்கையற்று அந்த சுழற்சியில் சிக்காமல் தன் போக்கில் உள்ளவன். அதனால் தான்  காதல் என்ற எதுவும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்ளவும் முடியாமல், உதறித்தள்ளவும் முடியாமல் அவஸ்த்தை வாழ்வு. இதை விட சொல்லும்படியாக விசேஷமானவன் இல்லை. காலம் இப்படி அவனை நகர்த்தி செல்லும் வேளையில் தான் ஒரு பொதுப் பிரச்சனையில்   அந்த தேவதையைக்  கண்டான். அந்த பிரச்சனையில் இருவரும் ஒரு அணியில் கைகோர்க்க வேண்டிய நிலை, அதற்க்கு தீர்வு காண எடுத்துக் கொண்ட நேரத்தில் இருவரும் அறிமுகம் ஆகி நட்பென்ற நடையில் கைகோர்த்துச் சென்றனர் ..

நாட்கள் செல்ல செல்ல இருவரதும் நட்பும்  பெருகி தங்களது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு போனது. கஷ்ட நஷ்டங்கள் என்றால் எல்லாம் அவனுடையது தான், அவளது என்று எதுவும் இல்லை, காரணம்,  அவள் வாழ்க்கை நேரான சாலையில் எதிர்ப்படும் ஓன்று இரண்டு ஸ்பீட் பிரேக்கர் தவிர சீரான பயணம் போல. பெற்றோருக்கு மூத்தவள், தம்பி ஒருவன், படிக்கிறான். அப்பா அரசாங்க உத்தியோகம், அன்பான அம்மா. அவளும் நல்ல படிப்பு, கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகம் என்று பெருமையாக வளம் வரும் குடும்பம். அதுமட்டுமா? என் பிள்ளை போல் யாருன்னு அவள் பெற்றோரும், பெற்றால் இவளைப் போல பிள்ளை பெற வேண்டும் என்று சொந்தங்களும், அவளைப் பார்த்து வாழப் பழகுங்கள் என்று தங்கள் பிள்ளைகளுக்கு சுற்றத்தாரும் சொல்லக் கூடிய அளவுக்கு அவளது குணநலன்கள். அதனால் தான் அவன் சுகதுக்கங்களுக்கு ஒரு வடிகாலாக இருந்தாள். ஆறுதல் வார்த்தைகளால் அரவணைத்தாள். அவனும் அவள் என்றால் உருகினான். அவள் கூட பேசாமல் இருக்க முடியாது என்கின்ற அளவுக்கு ஆளானான். யாருக்கும் பிரயோசனப் படாமல் அவனுள் இருந்த அன்பு பாசம் எல்லாவற்றையும் அவள்மீது கொட்டினான். ஆனால் அவள் சூழலில் கிடைத்த  அன்புக்கு அது ஈடு இல்லையென்றாலும் புது அனுபவமாக அவளும் அனுபவித்தாள். ஆனாலும் அவளும் அவனும் நட்பு என்னும் எல்லை மீறவில்லை. ஆனாலும் காலம் அதனை மீறவைக்க வழி வகுத்தது.

அவளது அலுவலக வேலையாக வெளியூர்க்கு ஒரு வாரப் பயணம் போக நேர்ந்தது. அவனிடமும் சொன்னாள். அவனும் அவளுடன் ரயில் நிலையம் சென்றான். இருவரும் வழமை போல் பேசிக்கொண்டு இருந்தார்கள், அவள் செல்ல வேண்டிய ரயிலும் வந்தது, ஏறிக் கொண்டாள், கையசைத்து விடை கொடுத்தான். ரயில் பார்வையை விட்டு மறைந்ததும் தான், கவனித்தான் கன்னங்களில் ஈரம். கையை வைத்து பார்த்தான். திடுக்கிட்டு போனான் கண்கள் அழுது இருந்தது தெரிந்தது. அவன் வாழ்க்கையில் முதல் தடவை கண்ணீர். அறைக்கு வந்தான். மனசு ஒரு நிலையில் இல்லை, அவள் பிரிவு வாட்டியது, அது மட்டுமா அவள் போனதற்கு ஏன் கண்ணீர் வந்தது என்று புத்தி மனதிடம் விசாரணை செய்து கொண்டிருந்தது. எப்படியான வேதனையிலும் கலங்காதவன், அவள் இல்லாத பொழுதினில் புழுவாக துடித்தான். சோறு தண்ணி தூக்கம் தொலைத்தான். அன்று இரவும் வந்தது, அவளும் ஊர் போய் சேர்ந்ததும் முதலில் அவனுக்கு தான் போன் பண்ணினாள், அவள் குரலிலும் அதே தவிப்பும் வேதனையும் தெரிந்தது. அவள் குரல் கேட்ட நொடியில் இவன் வேதனை ஏக்கம் எல்லாம் மாயமானது. விடிய விடிய பேசினார்கள். இரவு தொலைபேசியில் நண்பர்களாக ஆரம்பித்தவர்கள், காலையில் காதலர்களாக தொலைபேசியை துண்டித்தார்கள். அத்துடன் அவர்கள் காதலும் சிறகு கட்டிப் பறந்தது, இந்த உலகத்தை மறந்தார்கள், கற்பனையில் வாழ ஆரம்பித்தார்கள், பிள்ளை குட்டி கூட பெற்றார்கள். சண்டை போட்டார்கள் அழுதார்கள், ஊடலும் கூடலுமாய் திளைத்தார்கள். காலம் எப்போதும் மனித வாழ்வை சீராக கொண்டு போக விரும்புவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறுவதில்லை என்ற நியதிக்கு இவர்களும் ஆளானார்கள்.

அவன் தேவதைக்கு வீட்டில் திருமணத்துக்கு வரன் தேடும் படலம் ஆரம்பமாயிற்று. அவள் பெற்றோர் அவளுக்கு கணவனாக வருபவனுக்கு இருக்க வேண்டிய தகுதி அந்தஸ்த்து என்று ஒரு வட்டம் போட்டு தேட சுற்றமோ கூட ஜாதி குலம் கோத்திரம் என்று அதற்கு மேல் ஒரு வட்டம் போட்டு சல்லடை போட்டு சலிக்க தொடங்கினார்கள். இவர்கள் இருவரும் நிலைகுலைந்து போனார்கள். காரணம் அவர்கள் போட்ட நிபந்தனைகளில் பத்துக்கு ரெண்டில் கூட இவன் தேற மாட்டான். அவனுக்கு இருந்த ஒரே ஒரு தகுதி அவள் மனதை வென்றவன். அதை ஏற்றுக் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவள் குடும்பத்தில் காணப் படவில்லை. அதற்காக அவர்கள் வெறி பிடித்தவர்கள் இல்லை. தங்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தை காட்டும் வழி அது. அவனை விட அதிகம் பாதிக்கப் பட்டவள் அவள்தான், அவன் கவலை அவள் பிரிந்து விடுவாள் என்பது  மட்டும். அவளுக்கோ வீட்டிலும் பேச முடியாமல் அவனையும் மறக்கமுடியாமல் இருதலைகொள்ளியாய் தவித்தாள். வீட்டில் அவர்கள் நிபந்தனைக்கு இவன் தகுதியானவன் இல்லை என்பதை விட அவள் வீட்டிலும் சுற்றத்திலும் வாங்கி வைத்திருக்கும் நல்ல பெயர், அவள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர் மீது உள்ள பாசம் என்பன வீட்டில் அவள்  பேசாமடந்தையாகி கோழையானாள். ஒரு புறம் அவனையும் அவன் காதலையும் மறக்க முடியாமல் ஊமையாக உள்ளுக்குள்ளே அழுதாள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவனின் பரிதவிப்பு அவளை உருக்குலைத்து. அவனாவது அவளிடம் சொல்லி அழுதான். அவளோ யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் தவித்தாள். பெண்ணாக பிறந்ததற்கு இதுவரை பெருமைப் பட்டவள் வாழ்வில் முதன்முறையாக வேதனைப் பட்டாள்.

எல்லா கதைகளுக்கும் முகவுரை இருப்பது போல் முடிவுரையும் உண்டு. சில சிறுகதைகள் ஆகின்றன சில தொடர்கதை ஆகின்றன. இவர்கள் காதலுக்கும் முடிவுரை  எழுதும் நாளும் வந்தது. வழமையாக சந்திக்கும் இடத்தில் நான்கு கண்களும் கண்ணீரோடு சந்தித்துக் கொண்டன. அவள் அடுத்தவாரம் திருமணம் என்று சொன்னாள். அவளை சக்தியை மீறிய ஏற்பாடு அது என்று எவ்வளவோ புரிய வைத்தாள். அவனோ அவளைக் கெஞ்சினான், அவனோடு வாழ ஆயிரம் வழி சொன்னான். எல்லா பாதைகளும் ரோமாபுரிக்கு என்பது போல அவன் சொன்ன வழிகள் எல்லாவற்றையும் தன பெற்றோர் பாசத்தை காட்டி நிராகரித்தாள். கோபமாக சண்டையாக அழுகையாக கெஞ்சலாக காதலாக வெகு நேரம் பேசினார்கள். செத்துப் போவதாக கூட சொன்னான், அவள் கைகூப்பி தடுத்தாள். இருவரும் காதல் வலியால் துடித்தார்கள் வேறு வேறு உணர்வுகளோடு, கூடவே அவளுக்கு குற்ற உணர்ச்சியும் சேர்த்து வதைத்தது. பிரியும் வேளை வந்தது அவள் சொல்லியும் சொல்லாமலும் வந்த பாதைவழியே திரும்பினாள் அவனிடம் கொடுத்த இதயத்தை எடுக்கவும் மறந்து நடைப்பிணமாக... அவனோ இடிவீழ்ந்த மரமாக அவள் போகும் திசையை பார்த்து நின்றான், அவன் இதயத்தை அவள் தூக்கி ஏறிந்து  இவன் காலடியில் போட்டுச்  செல்வதாய் உணர்ந்தான் .....

எதன் மீதோ மோதுவது போல் உணர்வு பெற்று திடுகிட்டான். சுற்றும்முற்றும் பார்த்த போது அவள் ஊர் வந்து விட்டது தெரிந்தது. ஊர் இது என்று  தெரியுமே தவிர அவள் வீடு தெரியாது. இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினான். ஆனாலும் நினைத்த அளவுக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை, யாரிடமும் கேட்கவும் முடியாது. தேடத் தொடங்கினான். இன்னொரு ஆடவனுடன் அவளை நினைத்துப் பார்க்க முடியாமல் தான் இத்தனை காலமும் தவித்தான், ஆனாலும் அவள் வாழ்வியலை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதனை வென்று விட இப்போது அவளை தேடி அவள் ஊரில். ஒரு தெருவில் செல்லும் போது கவனித்தான், தூரத்தில் ஒரு பெண் கையில் சிறு பையுடன் வந்து கொண்டிருந்தாள். மனதுக்குள் மணியடித்தது, தலையை அழகாக சரித்தபடி வருவது அவன் தேவதைதான். மனம் சந்தோசத்தில் துள்ளியது. அதுவும் ஒரு கணம் தான், அருகாமையில் அவளை பார்த்தும் நிலை தடுமாறிப் போனான். ஆண்டவா என்ன கொடுமை இது. அந்த  தேவதை வெள்ளையுடையில் ஒரு விதவையாக அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். என்னாச்சு அவள் கணவனுக்கு, இந்த சிறுவயதில் ஏன் இந்த நிலை. இந்த கோலம் பூணவா என்னையும் விட்டு சென்றாய் என்று அவன் மனம் ஓலமிட்டது. அவனை அவள் பிரிந்து சென்ற வலியை விட இப்போது உயிர் போகும் வலியை உணர்ந்தான். இருந்தாலும் அவளுக்கு என்ன நடந்தது என்று அறிய அவளை அறியாமல் பின் தொடர்ந்து செல்ல தொடங்கினான்.

யாரிடமும் கேட்கவும் முடியாது, கேட்கவும் கூடாது, கேட்டாலும் பதில் கிடைக்காது. அவனாகத்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனாலும் மார்க்கம் அறியாது தயங்கினான். அப்போது அவளை கடந்து இருவர் நேரே வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வெளியூர்க்காரன் மற்றவன் உள்ளூர்க்காரன் போல இருந்தது அவர்கள் பேச்சு. அந்த பேச்சு அவள் தேவதையை பற்றியதாக இருந்தது அவனுக்கு வசதியாக போனது. காது கொடுத்தான். ஒருவன் மற்றவனிடம் "யாருப்பா இந்த பொண்ணு சின்ன வயசில இந்த கோலம், ஆண்டவன் இருக்கானா  இல்லையா" என்று கேட்டான். மற்றவனும் பதிலாக "ஆண்டவனும் இல்லை ஒன்றுமில்லை, இந்த பொண்ணாக செஞ்சிகிட்டது, இந்த பொண்ணுக்கு அவங்க ஆளுங்க நல்ல இடத்துல சம்பந்தம் பேசி, தடபுடலா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணினாங்க, கல்யாணத்துக்கு முத நாள் இரவு இந்த பொண்ணு கத்தி கலாட்டா பண்ணி கல்யாணத்தையே நிறுத்திடுச்சி. அவங்க வீட்டு ஆளுங்க கவுரவம் அந்தஸ்த்து, ஜாதி அது இதுன்னு சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க. இந்த பொண்ணு அதையெல்லாம், தூக்கி எறிஞ்சிட்டு கல்யாணத்தையும் நிறுத்திட்டு அன்னையிலிருந்து இந்த கோலத்துல இருக்குது" என்று சொன்னான். மற்றவனும் விடாமல்" எதுக்காக அப்படி பண்ணிடிச்சி"ன்னான், திரும்பவும்ம்பதில் வந்தது" யாரோ ஒரு பையன காதலிச்சதாம், சம்பவ நைட்டு அவன்கிட்ட இருந்து போன் வந்துதாம்". இதற்கு மேல் அவனுக்கு அவர்கள் பேசிக் கொண்டது கேட்கவில்லை. அப்படியே கல்லாக சமைந்து விட்டான்.

அவனை குற்ற உணர்ச்சி முழுவதுமாக ஆட்கொண்டது. தன் தேவதையின் இந்த நிலைமைக்கு தான் காரணம் என்பது புரிந்தது. அவன் எடுத்த போன் அழைப்பு தான் அவளின் இன்றைய கோலத்துக்கு காரணம். துடித்து விட்டான். ஆனாலும் ஓன்று மட்டும் புரியவில்லை, எந்த அந்தஸ்த்து பாசம் என்று காரணம் காட்டி அவனை விட்டு பிரிந்து  அவனை இந்த நிலைக்கு ஆளாக்கினாளோ, அதே அவனுக்காக அவை அனைத்தயும் தூக்கி எறிந்து இருக்கிறாள். இது என்ன மாதிரி மனநிலை என்று தெரியாமல் குழம்பினான். எது எப்படி இருந்தாலும் தான் செய்த முட்டாள் தனத்தால் தன் தேவதையின் வாழ்வு இப்படியாகி விட்டதே என்பதற்கு அவனிடம் எந்த சமாதானமும் கிடைக்கவில்லை. அன்று போன் பண்ணி தான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொன்னது எவ்வளவு பெரிய விளைவை அவள் வாழ்வில் உண்டாக்கி விட்டது. நினைக்கும் போதே அவன் மீதே அவனுக்கு கோபம் பொங்கியது. செத்து விடலாம் போல் இருந்தது. ஆனாலும் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. அவன்தானே அவள் திருமண நாள் முதல் இரவு போன் பண்ணி அவளுக்கு சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டான்....!




புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!