Sunday, June 29, 2014

சென்ற பாகங்களில் ஒரு மந்திரவாதி நம் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்ற போர்வையில், தன்  தந்திர வித்தைகளாலும் பேச்சு சாதுரியத்தாலும் நம்மை ஏமாற்றி நம் நேரம், பொருள், பணம் என்பவற்றை எல்லாம் எப்படி அபகரிக்கிறான் என்று பார்த்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருந்து மாயம் என்கின்ற போர்வையில் என்னவென்று தெரியாத வஸ்த்துக்களை கொடுத்து, பிற்காலத்தில் நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் அதே வேளையில், மூட நம்பிக்கை என்னும் விதையை  நம் மனதில் ஆழ விதைத்து நம்மை அவனுடைய நிரந்தர வாடிக்கையாளர் வேறு ஆக்கி விடுகிறான்.



சரி, நாம் எப்படி அவனின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் அவன் நம்மை தேடி வருவதில்லை, நாம் தான் அவனை தேடி போய் ஏமாறுகிறோம். இதற்க்கு முக்கிய காரணம், நமக்கு வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு நம் அறிவுக்கு எட்டியவரை நம் கண்முன்னே தீர்வு கிடைக்காத போது தான், இவ்வாறான வழிகளை  தேர்ந்தெடுக்கிறோம், சிலவேளை பரம்பரையாகவும் சிலருக்கு இந்த நம்பிக்கை தொடர்வது உண்டு. இவ்வாறாக நமக்கு சிக்கல்கள் ஏற்படும் போது, நம்மால் தீர்க்க முடியாவிட்டால் நம் மனம் குழம்பி எப்படியாவது தீர்க்க வேண்டும் என்றுதான் என்னுகிறோமே தவிர அதற்குரிய வழிமுறைகளை தேடுவதில்லை. இந்த நேரத்தில் நாம் நம் சொந்தங்களிடம், நண்பர்களிடம் ஆலோசனை செய்யும் போது அவர்களில் யாரவது இந்த மாதிரி மந்திரவாதிகளிடம் ஏமாந்தது கூட தெரியாமல் ஏமாந்து இருந்தால், அவர்களின் சிபாரிசு அந்த மந்திரவாதியாக தான் இருக்கும். நமக்கும் வேறு மார்க்கம் இல்லாது நாமும் ஏற்றுக் கொண்டு விடுவோம்.



இப்போது நமக்கு ஒரு கேள்வி வரும், ஏமாற்றுகின்றான் என்று  நான் சொல்லுகின்ற மந்திரவாதி எப்படி நம் பிரச்சனையை தீர்க்கிறான் என்று. ஊரில் ஒரு விடயம்  சொல்லுவார்கள், ஜலதோஷம் வந்தால் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சுகமடையும், மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாளில் குணமடையும் என்று. அதுதான் மந்திரவாதியின் விடயத்தில் நடைபெறுகிறது. போன பாகங்களில் மந்திரவாதி நம்மை ஏமாற்றுகிறான் என்று நான் குறிப்பிட்ட விடயங்களை எடுத்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பிரச்சனை நம் ஊர் பகுதிகளில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடைகாரருக்கு வந்தது என்று வைத்துக் கொள்வோம். ஊர் பகுதிகளில் ஜவுளி வியாபாரம் என்பது ஏதாவது பண்டிகைகளை வைத்தே நடைபெறும், அதுவும் குறிப்பிட்ட காலங்களில், பொங்கலுக்கு நல்ல வியாபாரம் இடம்பெறும். அவரும் கடனோ உடனோ வாங்கி பொங்கல் வியாபாரம் பார்ப்பார், அதில் வரும் வருமானத்தை பார்த்து கொஞ்சம் பெருசாக ஆசைப் பட்டு அகலக் கால் வைத்தும் விடுவார். பொங்கல் முடிந்ததும், வியாபாரம் அப்படியே படுத்து விடும். இவருக்கு வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி இவரால் சமாளிக்க முடியாமல் போய் விடும். இந்த நேரத்தில் யாருடையாவது ஆலோசனைப் படி மந்திரவாதியை சரணடைவார். அவரும் நான் முந்திய பாகங்களில் சொன்ன மாதிரி வித்தைகளை காட்டி பெரிய அமௌன்ட்டை ஆட்டையப் போட்டுவிடுவார். அவர் அவரது சித்துவேலைகளை காட்டிமுடிவதற்க்கும் தீபாவளி சீசன் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன வியாபாரம் களைகட்டும். இப்போது அந்த ஜவுளிக் கடைக்காரர் என்ன நினைப்பார், இதெல்லாம் தானாக நடந்ததா இல்லை மந்திரவாதியின் திறமையால் நடந்ததா? அப்புறம் என்ன அவரும் இதே போல் நாலுபேரிடம் மந்திரவாதிக்கு சிபார்சு பண்ணி இந்த மூடநம்பிக்கையை வளர்க்க அயராது பாடுபடுவார்.



ஓன்று மட்டும் கவனித்து பாருங்கள், இப்படி ஊர் வாழ்வில் ஒளியேற்றும் மந்திரவாதிகளின் வாழ்வு எப்போதும் அதலபாதளத்திலேயே இருக்கும், விதிவிலக்காக ஓன்று ரெண்டைத் தவிர. ஏன் இவர்களால் இவர்களுக்கே மந்திர வேலைகள் செய்து அவர்களை வளப்படுத்த முடியாதா? ஊருக்குள் குறி  சொல்லும் பழங்குடி மக்கள் நாம் எப்போது கோடிஸ்வரன் ஆவோம் என்று துல்லியமாக கூறுவார்கள். அவர்களுக்கு இரவு சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்று கணிக்க முடியாமல் சோத்துக்கே திண்டாடுவார்கள். சில மந்திரவாதிகள் எலுமிச்சை பழத்தை வெட்டி ரத்தம் எடுப்பார்கள். அவர்களிடம் நீங்கள் "உங்கள் மந்திரத்தை ஒன்றுக்கு ஆயிரம் தடவை உச்சரித்து இப்போ லேட்டஸ்ட்டாக அப்பிள் பழம் ஒன்றை வெட்டி ரத்தம் எடுத்துக்காட்டுங்கள்" என்று சொல்லுங்கள், அவர்களால் அது முடியவே முடியாது. ரத்தம் போல சிவப்பு கலரில் திரவம் எடுக்க எலுமிச்சை பழத்தில் மட்டுமே முடியும், அப்பிள் பழத்தில் தலைகீழாய் நின்றாலும் முடியாது. அதை நீங்களே செய்யலாம். இதற்கு ஆள் எதற்கு.  

-தொடர்ந்து வரும்.

முந்தைய பாகங்களுக்கு: பாகம் ௦1பாகம் 02பாகம் 03பாகம் 04

0 என்னை கிழிச்சவங்க:

Post a Comment


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!