ஊரிலோ அரச உத்தியோகம், ஆனாலும் மூன்றம் மண்டல நாடுகளின் தலைவிதிக்கு ஆட்பட்டு பொருளாதார சரிவு அவனுக்கும் சரிசெய்ய முடியாதபடி. அதனால் தான் சம்பளமற்ற விடுமுறையில் வேலையை தூக்கி எறிந்து விட்டு வளைகுடா நாட்டை நோக்கி பொருளாதார போர் தொடுக்க படையெடுத்தான். அங்கு செல்லும் முன்பே ஏகப்பட்ட கனவுகள். உள்ளூர் தொழிலில் கிடைத்த மரியாதையும் புகழும், வெளிநாடு வரை பரவி இருக்கும். விமானம் இறங்கியதும் விமான நிலைய வாசலிலே அரபு நாட்டு முதலாளிகள் தன்னை வரவேற்பார்கள், தொழில் கொடுக்க போட்டி போடுவார்கள் என்ற மனப் பால் குடித்த படி விமானம் ஏறினான். இறங்கியதும் தான் சுள்ளென்ற அந்த பாலைவன வெயிலும் வெம்மையும் அவன் கனவை சுட்டெரித்தன...!
இருந்தாலும் தளரவில்லை, பை நிறைய சுயவிபரக் கோவைகளை நிரப்பிக் கொண்டு வீதி வீதியாக தொழில் வேட்டையில் இறங்கினான். ஒவ்வொரு தொழில் நிலையமாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். நடக்கையில் தலையில் இருந்து வியர்வை வடிந்து கண்ணில் பட்டு எரிச்சலாக இருக்கும். கூடவே கண்ணீரும். அது எரிச்சலால் வந்த கண்ணீரா இல்லை வேதனையின் ஊற்றா? இதுவரை புரியவில்லை.....!!
இப்படியே ஆறுமாதம் வெட்டியாக ஆனால் ரொம்ப பரபரப்பாக ஓடியது. ஏற்கனவே இருந்த கடன் தொகையில் பக்கத்தில் ஒரு பூச்சியமும் சேர்ந்து படாத பாடு படுத்தி தூக்கத்தையே தொலைக்க வைத்தது. ஒருவாறாக அடித்துபிடித்து பொன்னை வைக்கும் இடத்தில் பூவைப்போல் அடிமாட்டு சம்பளத்திற்கு ஓரிடத்தில் வேலைக்கு சேர்ந்தான். அடுத்த ஆறுமாத உழைப்பை கடன் ஏப்பம் விட கையில் ஏதுமில்லாத சூழல்.இந்நிலையில் ஊரில் இருக்கும் வரை சின்ன ஜலதோஷம் கூட வந்து பார்த்திராத உயிரான தந்தையின் திடீர் மரணம். உருக்குலைந்து போனான்.......!!!
ஊருக்கு போயாக வேண்டிய சூழல், ஆனால் போவதற்கு உள்ள ஒரே காரணம் தந்தையின் மரணம் மட்டுமே, ஆனால் போக முடியாது என்பதற்கு பல காரணங்கள் முன்னாடி இருந்தன. வேலையில் சேர்ந்த புதிது, கையில் பணமில்லை, சீராட்டி பாராட்டி உயிரா வளர்த்த தந்தையின் இறுதிச் சடங்கு செலவு என்று. வேலை செய்யும் இடத்தில் வாங்குவது என்றால் அவர்கள் அவனை அதை நம்பி கொடுப்பார்கள். வாங்கிக் கொண்டு போய் விட்டு திரும்பி வாராவிட்டால் யாரிடம் கேட்பது என்பது அவர்கள் கவலை. அவன் கவலை அவனுடைய தந்தை. ஒரே ஒரு வழிதான் இல்லை வலிதான் இருந்தது. அவனை அங்கு அடகு வைத்து பணம் வாங்கி ஊருக்கு அனுப்பினான் தந்தையின் இறுதிச் செலவுக்கு....!!!!
பணத்தை அனுப்பி விட்டு உயிர் கொடுத்தவன் உயிரற்ற உடலை கடைசியாக பார்க்கவும் விதியில்லாமல், சத்தம் போடாமல் ஓலமிட்டுக் கொண்டிருந்தான் தேற்றவும் ஆளில்லாமல் சபிக்க பட்டவன்.........!!!!!
சுயம் தொடரும்......!!
சுயம் வாழ்வியலை சிந்திக்கவைக்கின்றது. தொடரட்டும் அடுத்த பகுதிக்காக காத்து இருக்கின்றேன்.
ReplyDeleteநன்றி நண்பரே என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு
ReplyDelete