Saturday, September 20, 2014

அவன் புறப்பட்டு விட்டான்,அவள் ஊருக்கு........ அவளைப் பார்க்க பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்பயணம்.... திடீர் ஞானம் வந்து புறப்படவில்லை, இது வரை போகாமலிருக்க பல காரணங்கள் இருந்தாலும் பார்க்கும் தைரியமில்லை என்பது தான் முக்கியமானது. ஆனால் இப்போது தயக்கத்தை ஆவல் வென்றுவிட காலமும் கைகோர்க்க கிளம்பி விட்டான். பயணம் என்னவோ முன்னோக்கி இருந்தாலும் சிந்தனை மட்டும் பின்னோக்கி சென்று கொண்டிருந்து.

அவன் வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது, மேட்டில் ஏறியதை விட பள்ளத்தில் வீழ்ந்ததே அதிகம், சொந்தபந்தப் பிணைப்பு இன்றி தன்னந்ததனியாக வாழப் பழகியவன். அந்த அரவணைப்புக்கு ஏங்கியவன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்  பாதையில் சென்றவன். பாசங்களில் நம்பிக்கையற்று அந்த சுழற்சியில் சிக்காமல் தன் போக்கில் உள்ளவன். அதனால் தான்  காதல் என்ற எதுவும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்ளவும் முடியாமல், உதறித்தள்ளவும் முடியாமல் அவஸ்த்தை வாழ்வு. இதை விட சொல்லும்படியாக விசேஷமானவன் இல்லை. காலம் இப்படி அவனை நகர்த்தி செல்லும் வேளையில் தான் ஒரு பொதுப் பிரச்சனையில்   அந்த தேவதையைக்  கண்டான். அந்த பிரச்சனையில் இருவரும் ஒரு அணியில் கைகோர்க்க வேண்டிய நிலை, அதற்க்கு தீர்வு காண எடுத்துக் கொண்ட நேரத்தில் இருவரும் அறிமுகம் ஆகி நட்பென்ற நடையில் கைகோர்த்துச் சென்றனர் ..

நாட்கள் செல்ல செல்ல இருவரதும் நட்பும்  பெருகி தங்களது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு போனது. கஷ்ட நஷ்டங்கள் என்றால் எல்லாம் அவனுடையது தான், அவளது என்று எதுவும் இல்லை, காரணம்,  அவள் வாழ்க்கை நேரான சாலையில் எதிர்ப்படும் ஓன்று இரண்டு ஸ்பீட் பிரேக்கர் தவிர சீரான பயணம் போல. பெற்றோருக்கு மூத்தவள், தம்பி ஒருவன், படிக்கிறான். அப்பா அரசாங்க உத்தியோகம், அன்பான அம்மா. அவளும் நல்ல படிப்பு, கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகம் என்று பெருமையாக வளம் வரும் குடும்பம். அதுமட்டுமா? என் பிள்ளை போல் யாருன்னு அவள் பெற்றோரும், பெற்றால் இவளைப் போல பிள்ளை பெற வேண்டும் என்று சொந்தங்களும், அவளைப் பார்த்து வாழப் பழகுங்கள் என்று தங்கள் பிள்ளைகளுக்கு சுற்றத்தாரும் சொல்லக் கூடிய அளவுக்கு அவளது குணநலன்கள். அதனால் தான் அவன் சுகதுக்கங்களுக்கு ஒரு வடிகாலாக இருந்தாள். ஆறுதல் வார்த்தைகளால் அரவணைத்தாள். அவனும் அவள் என்றால் உருகினான். அவள் கூட பேசாமல் இருக்க முடியாது என்கின்ற அளவுக்கு ஆளானான். யாருக்கும் பிரயோசனப் படாமல் அவனுள் இருந்த அன்பு பாசம் எல்லாவற்றையும் அவள்மீது கொட்டினான். ஆனால் அவள் சூழலில் கிடைத்த  அன்புக்கு அது ஈடு இல்லையென்றாலும் புது அனுபவமாக அவளும் அனுபவித்தாள். ஆனாலும் அவளும் அவனும் நட்பு என்னும் எல்லை மீறவில்லை. ஆனாலும் காலம் அதனை மீறவைக்க வழி வகுத்தது.

அவளது அலுவலக வேலையாக வெளியூர்க்கு ஒரு வாரப் பயணம் போக நேர்ந்தது. அவனிடமும் சொன்னாள். அவனும் அவளுடன் ரயில் நிலையம் சென்றான். இருவரும் வழமை போல் பேசிக்கொண்டு இருந்தார்கள், அவள் செல்ல வேண்டிய ரயிலும் வந்தது, ஏறிக் கொண்டாள், கையசைத்து விடை கொடுத்தான். ரயில் பார்வையை விட்டு மறைந்ததும் தான், கவனித்தான் கன்னங்களில் ஈரம். கையை வைத்து பார்த்தான். திடுக்கிட்டு போனான் கண்கள் அழுது இருந்தது தெரிந்தது. அவன் வாழ்க்கையில் முதல் தடவை கண்ணீர். அறைக்கு வந்தான். மனசு ஒரு நிலையில் இல்லை, அவள் பிரிவு வாட்டியது, அது மட்டுமா அவள் போனதற்கு ஏன் கண்ணீர் வந்தது என்று புத்தி மனதிடம் விசாரணை செய்து கொண்டிருந்தது. எப்படியான வேதனையிலும் கலங்காதவன், அவள் இல்லாத பொழுதினில் புழுவாக துடித்தான். சோறு தண்ணி தூக்கம் தொலைத்தான். அன்று இரவும் வந்தது, அவளும் ஊர் போய் சேர்ந்ததும் முதலில் அவனுக்கு தான் போன் பண்ணினாள், அவள் குரலிலும் அதே தவிப்பும் வேதனையும் தெரிந்தது. அவள் குரல் கேட்ட நொடியில் இவன் வேதனை ஏக்கம் எல்லாம் மாயமானது. விடிய விடிய பேசினார்கள். இரவு தொலைபேசியில் நண்பர்களாக ஆரம்பித்தவர்கள், காலையில் காதலர்களாக தொலைபேசியை துண்டித்தார்கள். அத்துடன் அவர்கள் காதலும் சிறகு கட்டிப் பறந்தது, இந்த உலகத்தை மறந்தார்கள், கற்பனையில் வாழ ஆரம்பித்தார்கள், பிள்ளை குட்டி கூட பெற்றார்கள். சண்டை போட்டார்கள் அழுதார்கள், ஊடலும் கூடலுமாய் திளைத்தார்கள். காலம் எப்போதும் மனித வாழ்வை சீராக கொண்டு போக விரும்புவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறுவதில்லை என்ற நியதிக்கு இவர்களும் ஆளானார்கள்.

அவன் தேவதைக்கு வீட்டில் திருமணத்துக்கு வரன் தேடும் படலம் ஆரம்பமாயிற்று. அவள் பெற்றோர் அவளுக்கு கணவனாக வருபவனுக்கு இருக்க வேண்டிய தகுதி அந்தஸ்த்து என்று ஒரு வட்டம் போட்டு தேட சுற்றமோ கூட ஜாதி குலம் கோத்திரம் என்று அதற்கு மேல் ஒரு வட்டம் போட்டு சல்லடை போட்டு சலிக்க தொடங்கினார்கள். இவர்கள் இருவரும் நிலைகுலைந்து போனார்கள். காரணம் அவர்கள் போட்ட நிபந்தனைகளில் பத்துக்கு ரெண்டில் கூட இவன் தேற மாட்டான். அவனுக்கு இருந்த ஒரே ஒரு தகுதி அவள் மனதை வென்றவன். அதை ஏற்றுக் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவள் குடும்பத்தில் காணப் படவில்லை. அதற்காக அவர்கள் வெறி பிடித்தவர்கள் இல்லை. தங்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தை காட்டும் வழி அது. அவனை விட அதிகம் பாதிக்கப் பட்டவள் அவள்தான், அவன் கவலை அவள் பிரிந்து விடுவாள் என்பது  மட்டும். அவளுக்கோ வீட்டிலும் பேச முடியாமல் அவனையும் மறக்கமுடியாமல் இருதலைகொள்ளியாய் தவித்தாள். வீட்டில் அவர்கள் நிபந்தனைக்கு இவன் தகுதியானவன் இல்லை என்பதை விட அவள் வீட்டிலும் சுற்றத்திலும் வாங்கி வைத்திருக்கும் நல்ல பெயர், அவள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர் மீது உள்ள பாசம் என்பன வீட்டில் அவள்  பேசாமடந்தையாகி கோழையானாள். ஒரு புறம் அவனையும் அவன் காதலையும் மறக்க முடியாமல் ஊமையாக உள்ளுக்குள்ளே அழுதாள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவனின் பரிதவிப்பு அவளை உருக்குலைத்து. அவனாவது அவளிடம் சொல்லி அழுதான். அவளோ யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் தவித்தாள். பெண்ணாக பிறந்ததற்கு இதுவரை பெருமைப் பட்டவள் வாழ்வில் முதன்முறையாக வேதனைப் பட்டாள்.

எல்லா கதைகளுக்கும் முகவுரை இருப்பது போல் முடிவுரையும் உண்டு. சில சிறுகதைகள் ஆகின்றன சில தொடர்கதை ஆகின்றன. இவர்கள் காதலுக்கும் முடிவுரை  எழுதும் நாளும் வந்தது. வழமையாக சந்திக்கும் இடத்தில் நான்கு கண்களும் கண்ணீரோடு சந்தித்துக் கொண்டன. அவள் அடுத்தவாரம் திருமணம் என்று சொன்னாள். அவளை சக்தியை மீறிய ஏற்பாடு அது என்று எவ்வளவோ புரிய வைத்தாள். அவனோ அவளைக் கெஞ்சினான், அவனோடு வாழ ஆயிரம் வழி சொன்னான். எல்லா பாதைகளும் ரோமாபுரிக்கு என்பது போல அவன் சொன்ன வழிகள் எல்லாவற்றையும் தன பெற்றோர் பாசத்தை காட்டி நிராகரித்தாள். கோபமாக சண்டையாக அழுகையாக கெஞ்சலாக காதலாக வெகு நேரம் பேசினார்கள். செத்துப் போவதாக கூட சொன்னான், அவள் கைகூப்பி தடுத்தாள். இருவரும் காதல் வலியால் துடித்தார்கள் வேறு வேறு உணர்வுகளோடு, கூடவே அவளுக்கு குற்ற உணர்ச்சியும் சேர்த்து வதைத்தது. பிரியும் வேளை வந்தது அவள் சொல்லியும் சொல்லாமலும் வந்த பாதைவழியே திரும்பினாள் அவனிடம் கொடுத்த இதயத்தை எடுக்கவும் மறந்து நடைப்பிணமாக... அவனோ இடிவீழ்ந்த மரமாக அவள் போகும் திசையை பார்த்து நின்றான், அவன் இதயத்தை அவள் தூக்கி ஏறிந்து  இவன் காலடியில் போட்டுச்  செல்வதாய் உணர்ந்தான் .....

எதன் மீதோ மோதுவது போல் உணர்வு பெற்று திடுகிட்டான். சுற்றும்முற்றும் பார்த்த போது அவள் ஊர் வந்து விட்டது தெரிந்தது. ஊர் இது என்று  தெரியுமே தவிர அவள் வீடு தெரியாது. இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினான். ஆனாலும் நினைத்த அளவுக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை, யாரிடமும் கேட்கவும் முடியாது. தேடத் தொடங்கினான். இன்னொரு ஆடவனுடன் அவளை நினைத்துப் பார்க்க முடியாமல் தான் இத்தனை காலமும் தவித்தான், ஆனாலும் அவள் வாழ்வியலை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதனை வென்று விட இப்போது அவளை தேடி அவள் ஊரில். ஒரு தெருவில் செல்லும் போது கவனித்தான், தூரத்தில் ஒரு பெண் கையில் சிறு பையுடன் வந்து கொண்டிருந்தாள். மனதுக்குள் மணியடித்தது, தலையை அழகாக சரித்தபடி வருவது அவன் தேவதைதான். மனம் சந்தோசத்தில் துள்ளியது. அதுவும் ஒரு கணம் தான், அருகாமையில் அவளை பார்த்தும் நிலை தடுமாறிப் போனான். ஆண்டவா என்ன கொடுமை இது. அந்த  தேவதை வெள்ளையுடையில் ஒரு விதவையாக அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். என்னாச்சு அவள் கணவனுக்கு, இந்த சிறுவயதில் ஏன் இந்த நிலை. இந்த கோலம் பூணவா என்னையும் விட்டு சென்றாய் என்று அவன் மனம் ஓலமிட்டது. அவனை அவள் பிரிந்து சென்ற வலியை விட இப்போது உயிர் போகும் வலியை உணர்ந்தான். இருந்தாலும் அவளுக்கு என்ன நடந்தது என்று அறிய அவளை அறியாமல் பின் தொடர்ந்து செல்ல தொடங்கினான்.

யாரிடமும் கேட்கவும் முடியாது, கேட்கவும் கூடாது, கேட்டாலும் பதில் கிடைக்காது. அவனாகத்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனாலும் மார்க்கம் அறியாது தயங்கினான். அப்போது அவளை கடந்து இருவர் நேரே வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் வெளியூர்க்காரன் மற்றவன் உள்ளூர்க்காரன் போல இருந்தது அவர்கள் பேச்சு. அந்த பேச்சு அவள் தேவதையை பற்றியதாக இருந்தது அவனுக்கு வசதியாக போனது. காது கொடுத்தான். ஒருவன் மற்றவனிடம் "யாருப்பா இந்த பொண்ணு சின்ன வயசில இந்த கோலம், ஆண்டவன் இருக்கானா  இல்லையா" என்று கேட்டான். மற்றவனும் பதிலாக "ஆண்டவனும் இல்லை ஒன்றுமில்லை, இந்த பொண்ணாக செஞ்சிகிட்டது, இந்த பொண்ணுக்கு அவங்க ஆளுங்க நல்ல இடத்துல சம்பந்தம் பேசி, தடபுடலா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணினாங்க, கல்யாணத்துக்கு முத நாள் இரவு இந்த பொண்ணு கத்தி கலாட்டா பண்ணி கல்யாணத்தையே நிறுத்திடுச்சி. அவங்க வீட்டு ஆளுங்க கவுரவம் அந்தஸ்த்து, ஜாதி அது இதுன்னு சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க. இந்த பொண்ணு அதையெல்லாம், தூக்கி எறிஞ்சிட்டு கல்யாணத்தையும் நிறுத்திட்டு அன்னையிலிருந்து இந்த கோலத்துல இருக்குது" என்று சொன்னான். மற்றவனும் விடாமல்" எதுக்காக அப்படி பண்ணிடிச்சி"ன்னான், திரும்பவும்ம்பதில் வந்தது" யாரோ ஒரு பையன காதலிச்சதாம், சம்பவ நைட்டு அவன்கிட்ட இருந்து போன் வந்துதாம்". இதற்கு மேல் அவனுக்கு அவர்கள் பேசிக் கொண்டது கேட்கவில்லை. அப்படியே கல்லாக சமைந்து விட்டான்.

அவனை குற்ற உணர்ச்சி முழுவதுமாக ஆட்கொண்டது. தன் தேவதையின் இந்த நிலைமைக்கு தான் காரணம் என்பது புரிந்தது. அவன் எடுத்த போன் அழைப்பு தான் அவளின் இன்றைய கோலத்துக்கு காரணம். துடித்து விட்டான். ஆனாலும் ஓன்று மட்டும் புரியவில்லை, எந்த அந்தஸ்த்து பாசம் என்று காரணம் காட்டி அவனை விட்டு பிரிந்து  அவனை இந்த நிலைக்கு ஆளாக்கினாளோ, அதே அவனுக்காக அவை அனைத்தயும் தூக்கி எறிந்து இருக்கிறாள். இது என்ன மாதிரி மனநிலை என்று தெரியாமல் குழம்பினான். எது எப்படி இருந்தாலும் தான் செய்த முட்டாள் தனத்தால் தன் தேவதையின் வாழ்வு இப்படியாகி விட்டதே என்பதற்கு அவனிடம் எந்த சமாதானமும் கிடைக்கவில்லை. அன்று போன் பண்ணி தான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொன்னது எவ்வளவு பெரிய விளைவை அவள் வாழ்வில் உண்டாக்கி விட்டது. நினைக்கும் போதே அவன் மீதே அவனுக்கு கோபம் பொங்கியது. செத்து விடலாம் போல் இருந்தது. ஆனாலும் அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. அவன்தானே அவள் திருமண நாள் முதல் இரவு போன் பண்ணி அவளுக்கு சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டான்....!




5 comments:

  1. கதை நெஞ்சை உருகவைக்கின்றது!

    ReplyDelete
  2. முதல்முறையாக தங்கள் தளம் வருகிறேன் சகோதரரே...
    அருமையான ஒரு கதையுடன் தொடக்கம்...
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. வலிகளை வரிகளாய் உருக்கி வார்த்த கதை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும், கருத்திற்கும்

      Delete
  4. அருமையான கதை

    ReplyDelete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!