அகம் புறம் (குறும்படம்)
ஒரு விடயத்தில் இரண்டு வகை பிரமிப்பு உண்டாகும், நம்மால் முடியாத விடயம் நடந்தேறும் போதும் , அதை இன்னொருவர் விடா முயற்சியுடன் நடத்தி முடிக்கும் போதும். அந்த இரண்டு வகை பிரமிப்பும் ஒருசேர என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது, இந்த "அகம் புறம்" குறும் படத்திலும், அந்த படத்துக்காக உழைத்த குழுவினரை பார்க்கும் போதும். குறிப்பாக அந்த குறும் படத்தின் இயக்குனர் குடந்தை ஆர். வி. சரவணனின் அபார முயற்சியினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கூடவே அவருக்கு தோள் கொடுத்த அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். இதில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது இவர்கள் அனைவரும் எனது நேரடி நட்பில் உள்ளவர்கள் என்பது எனக்கும் பெருமையே. ஆனால் இந்த பாராட்டு எல்லாம் அவர்களது இந்த முயற்சிக்கு தான். வாங்க அந்த முயற்சியில் என்ன பண்ணி இருக்குறாங்கன்னு பார்த்திட்டு கழுவி ஊத்தலாம். முக்கியமாக ஒன்னு சொல்லனும், விமர்சனம் என்னதும் ஏதோ நான் சினிமாவை கரைத்து குடித்த மேதாவின்னு தப்பா நினைச்சிராதீங்க. இன்னைய வரைக்கும் நான் தரை டிக்கெட்டு ரசிகன் தான்.
முதலில் நல்லவைகளை பாராட்டி பேசலாம், படத்தின் கரு வெங்காயம்ன்னு சொல்லலாம். இல்லாத ஒன்னுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி காரணங்ககள் கற்பிக்கின்றன என்பதனை அழகாக சொல்லி இருக்குறார்கள். தெளிவான நெறியாள்கை, ஒளிப்பதிவும் இசைக் கோர்ப்பு என்று சகல பக்கமும் அதகளம் பண்ணி வைத்திருக்கிறார்கள், வசனங்கள் டைமிங் காமடியில் சூடு பறக்கிறது. அதிலும் முகபாவங்கள் முடிந்தளவு வசனங்களுடன் ஒன்றிப் போக வைப்பதில் இயக்குனர் பாஸாகி இருக்குறார், அண்ணன் குடந்தை சரவணன் முழுநீள திரைப் படத்துக்கு தயாராகி விட்டார் போல் தெரிகிறது. வாழ்த்துகள்.
அடுத்து அண்ணன் துளசிதரன் பின்னி பிடலெடுத்து இருக்குறார். பெரிய மனுசன்னா இப்படி இருக்கனும் என்னு படம் முழுக்க வலம் வருகிறார். பாலகணேஷ் அண்ணன் நிச்சயமா போலிஸ் வேலையில் இருந்திருக்க வேண்டியவர் , அண்ணே மீசைதான் ஒட்டல. அடுத்து அரசன், உட்காந்த இடத்திலேயே படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். டைமிங் காமடி முடியல, அதிலும் "இதுக்கு நீ குப்பை தொட்டிக்கே வணக்கம் வெச்சி இருக்கலாம் ", "துருப் புடிச்ச மாதிரியே இருக்கே" எப்படியா சிரிக்காம, அரசன் அக்மார்க். கொஞ்சம் அழுத்தி பிடித்தால் தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகான ப்ளக் சொக்கலேட் பேபி கிடைக்க வாய்ப்பிருக்கு.
கோவை ஆவி, ஒரு சிறந்த நடிகனை அதுவும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ஒருவரை சினிமா உலகம் இதுவரை பயன்படுத்தாமல் இருப்பது சினிமா உலகுக்கே நஷ்டம். கார்த்திக் சரவணன், எங்கள் ஸ்பை, சிரிக்க மாட்டார்ன்னு சொன்ன ஆளைத்தான் தேடுகிறேன், தானும் சிரித்து நம்மையும் சிரிக்க வைத்திருக்கிறார். இன்னும் ரெண்டு படம் நடித்தால், வாகை சந்திரசேகர், நாசர் போன்றவர்களின் இடத்தை நிரப்ப சான்ஸ் இருக்கு. ஆரூர் மூனா கிட்ட ஒரு கேள்வி, "இதுக்கு முன்னாடி நீங்க பாம்பேயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க,? கமான் டெல் மீ, நாடி நரம்பு ரத்தம் எல்லாத்திலையும் இந்த ரௌடித்தனம் ஊறிப் போன ஒருத்தனால தான் இப்படி முடியும்".
அடுத்து படத்தில் நடித்த வாண்டுகள், முடியல படத்தின் ஆணிவேர்கள் அவர்கள் தான். அதிலும் ரக்சித் கார்த்திக் சரவணன், இந்த பையனை பார்க்கும் போது, "ஒரு நாயகன் உதயமாகிறான்" என்கிற பாட்டுதான் ஞாபகம் வருகிறது. பையன் கமிரா முன்னாடி நடிக்கிறோம் என்பதையே மறந்து விளையாடி இருக்குறான், கூடவே மற்ற குழந்தை நட்சத்திரங்களும் இயல்பாக நடித்து இருக்குறார்கள். மொத்தத்தில் படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் கமெராவினை கணக்கில் எடுக்காமல் இயல்பாக நடித்து இருப்பது மன நிறைவு.
இப்போ குறைகள்ன்னு பார்த்தால், படத்தில் அப்பட்டமாக தெரிவது எடிட்டிங் எனும் படத் தொகுப்பு. கொஞ்சம் எடிட்டிங் டேபிளில் இருக்கும் கத்தரியை சாணை பிடித்துக் கொண்டு வந்து படத்தினை வெட்டி தொகுத்து இருக்கலாம். அவ்வளவு மொட்டை அந்த கத்தரி. படத்தினை எடிட் செய்தவர், இயக்குனர் காட்சிக்கு காட்சி "ஸ்டார்ட் கமிரா, ஆக்சன்" என்று சொன்னதையும் படத்தில் வரும் வசனம் என்று நினைத்து விட்டார் போல் இருக்குறது. அதில் இயக்குனரும் கவனம் சிதறி இருக்குறார். அடுத்து படத்தின் திரிலிங் காட்சி அமைப்பில் எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை, என்னவோ குறை, கடைசிக் காட்சியில் அதனை திருப்திகரமாக செய்யவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் என்ன குறை என்று சொல்ல எனது சினிமா அறிவுக்கு தெரியவில்லை. அடுத்து முக பாவனைகளில் கொஞ்சம் நடிகர்களை வேலை வாங்கி இருக்கலாம். மற்றும் படி இந்த முயற்சி என்னளவில் இமாலய முயற்சி. வாழ்த்துக்கள்.
படத்தினை பார்த்து மகிழ்ந்திட:
டேய் , படத்தை விட உன்னோட விமர்சனம் நீளமா இருக்கேடா என்று உங்க மைன்ட் வாயிஸ் சொல்வது எனக்கு இங்க வரைக்கும் கேட்கிறது. என்ன பண்ண இவர்களது இமாலய முயற்சிக்கு என்னுடைய சிறிய ஊக்குவிப்பு.