எல்லோரும் தமது திரைப்பட வாழ்வை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்குவது என்ற மரபிற்கு ஏற்ப நானும் எனது திரைப்பட விமர்சனத்தை குறுந்திரைப்படத்தில் இருந்து தொடங்க எண்ணுகிறேன், எல்லாவற்றுக்கும் அந்த சமந்தாம்பிகை துணை நிற்க .....!
நாம நேரா விசயத்துக்கே போயிடுவோம் முதல்ல இந்த படத்திற்கு சிலநொடி சிநேகம் என்பதுக்கு பதிலாக முயலும் ஆமையும்ன்னு பெயர் வெச்சிருக்கலாம். ஏன்னா படத்துல வருகிற ரெண்டு நாயககர்களும் அப்படித்தான் இருக்காங்க, உருவத்திலையும் சரி பாத்திரப் படைப்பிலும் சரி. ஆனாலும் இயக்குனர் நாயகர்கள் ரெண்டு பேர்லயும் இருக்குற தனிப்பட்ட கோவத்தை வைத்து இப்படி பழிவாங்கி இருக்க வேணாம்ன்னு நம்ம விமர்சனக் குழு கருதுது. பின்ன என்னங்க எட்டு நிமிசப் படத்துல ரெண்டு நாயகர்ளையும் அஞ்சு நிமிசத்துக்கு மேல வெயில்ல நடக்க விட்டு வாட்டி வதக்கி இருக்காரு. அதிலயும், நாயகன் ஆவிக்கு அவர் ஒரு டச்சப் பாய் கூட வைத்துக் கொடாமல் வியர்க்க விறுவிறுக்க நடிக்க விட்டதை பார்க்கும் போது இயக்குனர் மேல் கண்டனக் கூட்டம் போட்டு கண்டிக்க நினைத்தாலும், ஆவி கெட்ட கேட்டுக்கு இது போதும் என்கிற இயக்குனரின் மைன்ட்வாயிஸ் நமக்கும் கேட்பதால் மன்னித்து விடுகிறோம். இணை நாயகன் அரசன் ஸ்ட்ரைட்டா கதாநாயகன் என்கின்ற ரேஞ்சில் இயக்குனரிடம் கெஞ்சிக் கூத்தாடி இருக்குறார் என்பதை படத்தில் இயக்குனர் ஒஞ்சி நிற்பது காட்டிக் கொடுக்கிறது.
இதையெல்லாம் விட்டுவிட்டு போகலாம் என்றால், இன்றைக்கு குறுந்திரை நாயகன், நாளை வெள்ளித்திரை நாயகன், அப்புறம் ரசிகர் மன்றம், பிக்காளி சூப்பர்ஸ்டார், சுண்ணாம்பு திலகம் அப்புறம் தமிழ்நாட்டின் தலைவிதிக்கு ஏற்ப முதல்வர் கனவு என்று நாயகர்கள் இருவரும் மனப் பால் குடித்தது கடைவாய் வழியே வழிந்திருப்பது காட்டிக் கொடுக்கிறது. இதுக்கும் நாம்தான் விமர்சனம் எழுதணும் போஸ்டர் ஓட்டனும் என்கிற கொடுமையை நினைக்கும் போது தான் தாங்க முடியல.
ஜோக் ஒப் த பார்ட்டை இத்துடன் நிறுத்திவிட்டு..................!
இயக்குனராக பரிணாமம் எடுத்திருக்கும் நண்பர் குடந்தை ஆர். வி. சரவணனுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். முதல் முயற்சி போலில்லாமல் தேர்ந்த ஒரு திறமை படத்தில் தெரிகிறது. முதல் படமே வெளிக்களத்தில். காட்சிகளில் வழிப்போக்கர்கள் உட்பட எல்லோரும் இயல்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டதில் அவரின் நெறியாள்கை தெரிகிறது. கொஞ்சமும் தொய்வில்லாத கதை தேவையான இடத்தில் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள். வாழ்த்த தோணவில்லை, கற்றுக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக கதைக்கு ஏற்றமாதிரி நாயகர்கள், பாத்திரத்துடன் ஒன்றிப் போன மாதிரி ஒரு உருவ மைப்பு ரெண்டு பேருக்கும்.
அரசன், நம்மை தினசரி கடந்து செல்லும் சாதாரண இளைஞ்சனின் உருவம், குறும்படம் என்று ஏனோ தானோ என்றில்லாமல் பாத்திரத்துடன் ஒன்றித்துப் போனது போன்று இருந்தது. வசனங்களில் சரியான தெளிவு. ஆவி, மத்தியதர மனிதனின் தோற்றம் அவரின் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது. வசன உச்சரிப்புக்களில், நடிப்பில் அரசனுக்கு சரியான போட்டி.
வாழ்த்துக்கள் நண்பர்களே, இதுபோன்று புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.