Sunday, August 31, 2014

இது வரையில் மந்திரவாதிகளும் பூசாரிகளும் இதர பேயோட்டுபவர்களும் நம்மை எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்று பார்த்தோம். இந்த பாகத்தில் இவர்களையும் தாண்டி நம் கண் முன்னால் இடம்பெறும் நம் கோட்டு கோபிநாத் சொல்லுவது போல் அனுமாஷ்ய நிகழ்வுகளை பார்க்கலாம். உதாரணமாக:

01. திடிரென்று ஒருவர் பேய்(?) பிடித்து அவர்க்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத மொழி பேசுதல்.

௦2. வழமையான அளவினை விட பலமடங்கு அருவருப்பான பார்ப்போரை பயமுறுத்தும் விதத்தில் ஒருவர் சாப்பிடுதல்


இப்படி பலவகை உண்டு, நான் முந்திய பாகங்களில் சொன்னது போல் இந்த மாதிரி விடயங்களில் மந்திரவாதிகளினதோ, பேயோட்டுபவர்களினதோ தலையீடு எதுவும் இல்லாமல், சாதாரண வாழ்வு வாழும் ஒருவர் திடிரென்று இவ்வாறான செயல்கள் செய்யும் போது நமக்கும் பேய் பிசாசு என்று நம்பிக்கை லேசாக தலைதூக்குவது தவிர்க்க முடியாது. அதற்கும் காரணம் உண்டு நம் தலைமுறையில் சிறு வயதில் உணவுடன் சேர்த்து நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இப்படியான மூட நம்பிக்களையும் ஊட்டி வளர்த்துதிருக்கிரார்கள். நாம் சரியாக சாப்பிடவில்லை என்றால், இந்த கவளத்தை மட்டும் சாப்பிடு இல்லாவிட்டால் பேயை கூப்பிட்டு உன்னை பிடித்துக் கொடுபேன், காட்டேரி வந்து சாப்பிடும் என்றெல்லாம் சொல்லித்தான் உணவுடன் மூட நம்பிக்கைகளையும் ஊட்டி இருக்குறார்கள். சரி இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்கின்றது என்று பார்ப்போம்.



முதலாவது ஒருவர் திடிரென்று தனக்கு பரிச்சயமில்லாத மொழி பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஆங்கில அறிவே இல்லாத ஒருவர் அதனை ஆங்கிலப் படத்தை தவிர வேறு எங்கும் கேள்விப்படாத ஒருவர் ஆங்கிலம் பேசினால் என்னாகும், நாமும் அவரிடம் சென்று தட்சனை வைத்துவிட்டு ஆங்கில பேயிடம் நம்குறைகளை சொல்லி நிவாரணம் தேட வேண்டியதுதான். அவரும் நமக்கு வாழ வழி காட்டுவார். உண்மையில் என்ன நடக்கிறது. அவர் பேசுவதை  ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உற்றுக் கவனித்தால் ஓன்று தெளிவாகும், நாம் என்ன கேள்வி கேட்டாலும் "கைய பிடிச்சி இழுத்தியா" என்கின்ற மாதிரி ஒரே வசனத்தை தான் சொல்லிக் கொண்டிருப்பார், வேறு வேறு ஏற்ற இறக்கங்களோடு ஒவ்வொரு கேள்விக்கும். உண்மையில் அவருக்கு வந்திருப்பது மனநோய், அவரே வைத்திய சிகிச்சை தேவைப் பாடு உள்ள ஒருத்தர். அவரிடம் போய் நாம் நமது நோய்க்கும் நம் கஷ்டங்களுக்கும் வழி சொல்ல கெஞ்சிக் கொண்டிருப்போம். என்னத்த சொல்ல நம் மூட நம்பிக்கையும் அளவை.

நம் மூளையின் நினைவகங்கள் இரண்டு வகைப் படும், வெளிமனது ஆழ்மனது என்று. நம்முடைய நாளந்த நடவடிக்கைகள் வெளிமனதால் நிர்வகிக்க படுகின்றது. அதில் பதியப் படுபவை குறிப்பிட்ட அளவுக்குமேல் சென்றால் அல்லது நாம் அந்த விடயம் சம்பந்தமாக கவனக் குறைவாக இருந்தால் அழிந்து போய்விடும். ஆனால் நம் ஆழ்மனது அப்படியல்ல, நம்முடைய கவனத்திற்கு வராத விடயங்கள் கூட அங்கு பதியப் பட்டு விடும். ஆனால் அது நம்முடைய நாளந்த நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தாது உறக்க நிலையில் இருக்கும். சில வேளைகளில் அது தூண்டலுக்கு உள்ளாகும் போது விழித்து தேவையான தகவல்களை கொடுத்து விட்டு மீண்டும் உறக்க நிலைக்கு சென்று விடும், நாம் சிலநேரங்களில் ஏதாவது தகவல்களை மறந்து விட்டு நெற்றியை அல்லது பின்னந் தலையினை தடவுவது மூலம் ஆழ்மனதினை தூண்டலுக்கு உள்ளாகுகின்றோம். இதனையே வைத்திய முறைகளில் ஹிப்னோடிசம் என்று சொல்லுகிறார்கள். இதனை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் நமக்கு கிறுகிறுத்து விடும் என்பதால் சுருக்கமாக விளங்கக் கூடிய மாதிரி சொல்லியிருக்கிறேன்.


இப்போது மேலே சொன்ன நபர் எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என்பதை பார்ப்போம், நான் நம் மூளையின் நினைவகங்களை பற்றி சுருக்கமாக சொன்னதற்கும் அதற்கும் தொடர்பு உண்டு என்பதால் தான் சிறு விளக்கமாக தந்தேன். மேலே சொன்ன நபர்  பரிச்சயமில்லாத மொழி பேசினாலும், அந்த மொழியினை அல்லது அவர் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளை எங்கோ எதோ ஒரு இடத்தில் அவரை அறியாமல் கேட்டு இருப்பார் அதை அவரின் வெளிமனது கவனத்தில் கொள்ளா விட்டாலும் ஆழ்மனது தெளிவாக பதிந்து வைத்திருக்கும். அந்த நபருக்கு ஏதாவது மன உளைச்சல்கள் அல்லது பாதிப்புக்கள் ஏற்படும் போது அவரது வெளிமனது சோர்வடைந்து தனது இயக்கத்தை குறைத்துக் கொள்ளும், அந்த வேளையில் அவரது ஆழ்மனது விழித்துக்கொண்டு தாறுமாறாக சேமித்து வைத்திருக்கும் தகவல்களை வழங்கும். அதில் இவர் ஏற்கனவே கேட்ட மொழியும் அடங்கும். இதற்க்கு சரியான சிகிச்சையும், மூளைக்கு நிவாரணமும் கொடுக்கும் பட்சத்தில் சரியாகிவிடும், அதை விடுத்து அவரிடம் சென்று நம் எதிர்காலத்தை ஒப்படைத்தால் என்னாகும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

- இன்னும் வரும்

முந்தைய பாகங்களுக்கு : பாகம்01, பாகம்02, பாகம்03, பாகம்04, பாகம்05,  பாகம்06

Thursday, July 10, 2014


மதங்களின் சாத்வீகமும்
மனித நற்பண்புகளும்
கழுத்து நெரிக்கப் பட்டு
பிணங்களோடு பிணங்களாக
அடுக்கப் படுகின்றன
ஒன்றாக...!

ஏற்றப் பட்ட வெள்ளைக்கொடி
இறக்கப்பட்டு கிழிக்கப்பட்டு
போர்த்துகின்றன அவற்றை
பறக்கவிடப் பட வேண்டிய
சமாதனப் புறா 
சட்டியில் கொதிக்கிறது 
இழவுவீட்டு விருந்தாக...!!


எண்ணிக்கையும் போதாது 
எண்ணியதும் தேறாது
என்றதும் பொங்கினர்
கொன்று போட்ட 
மதத்தையும் மனிதத்தையும் 
கூறுபோட்டு விற்க...!!!

எண்ணியதுவும் வேண்டியதுவும்
எல்லையின்றி கிடைத்ததுவும்
கோர முகத்தை மறைக்க 
மத இன முகமூடி மீண்டும்
சாத்தான்கள் வேதத்தை
 தூசு தட்டுகின்றன
நம்பிய பாமரன் மட்டும் 
இன்னும் பிளவுக்குள் 
மீள முடியாமல்...!!!!





பரவசமானேன்



காட்டாமல் மறைத்தாலும்
செல்லமாக காயப்படுத்தினாலும்
நாணந்தான் தடுத்தாலும்
நுகர்ந்து சுவாசிக்கிறேன்
உன் அன்பை........!!


பேசியதும் தெளிவில்லை
பேசாததும் தெரியவில்லை 
மவுனமும் புரியவில்லை
அறியவும் வழியுமில்லை...!!


தாங்காமல் தவிக்கிறேன்
அனல்புழுவாய் தெறிக்கிறேன்
கனவினையும் அழிக்கிறேன்
உன் வார்த்தை பார்த்தே 
கண்கள் பனிக்கிறேன்.....!!


என் வசந்தம் 
வந்து கொண்டிருக்கிறது
வந்தால்தான் தெரியும்
தென்றலா புயலா என்று...?
எதுவாக இருந்தாலும் 
என் சுவாசம் நேர்படும்
அது போதும் எனக்கு.....!!


நீ பேசுகின்ற 
ஒவ்வொரு வார்த்தையும் 
தேனாக இனிக்கிறது 
நீ கோபத்தில்
திட்டுவதையும் சேர்த்து
உன் கோபம் கூட 
என்னிடம்தான் என்பதால் ...!!


புரியாமல் பிரிவதும்
புரிந்த பின் நாணுவதும்
நாணத்துடன் சேர்வதும்
ஊடலின் அழகே.......!!


என் கர்வம் எல்லாம் 
உன் முன்னால்
தகர்ந்து விட்டது
உன் அன்புதான் உயர்ந்தது
ஒத்துக் கொள்கிறேன்
தோல்வியை பெருமையாக..!!


கண்டதும் பரவசமானேன்
பார்த்ததால் அல்ல
தூண்டிய அன்பினால்....!!

Thursday, July 3, 2014

மந்திரவாதிகளின் வாக்கு சாதூரியத்தால் நாம் எப்படி மயங்குகிறோம் என்று இந்த தொடரின் 01ம் பாகத்தில் விரிவாக குறிப்பிட்டு இருக்குறேன். சில வேளைகளில் நம்மை நம் வாயாலேயே சிக்கலில் மாட்டியும் விடுவார்கள். நம் வீட்டில் உள்ள பொருள், உதாரணமாக தங்கநகை வீட்டில் ஓரிடத்தில் வைத்து விடுவோம். அதுவும் தொலைந்தும் விடும், அந்த நேரம் வீட்டுக்கு வந்த ஒருவரை சந்தேகம் வேறு படுவோம். இருந்தாலும் நாகரீகம் கருதி அவரிடம் கேட்க மாட்டோம். இந்த நேரத்தில் நமக்கு மந்திரவாதியிடம் சென்று குறி சாத்திரம் பார்க்கும் படி ஏற்கனவே மந்திரவாதியிடம் ஏமாந்த ஒருவர் நம்மை உசுப்பேத்தி விடுவார். நாமும் அவரின் ஆலோசனைப் படி மந்திர வாதியிடம் செல்வோம். 



அங்கு போனதும் தான் நமக்கு ஏழரை ஆரம்பிக்கும். எல்லா சடங்கும்(?) முடிந்தபின் சொல்லுவான் தீர்ப்பு நம் குடும்பமே கலங்குகின்ற மாதிரி. "ஒரு ஆள் தான் எடுத்து இருக்கு, ஆனா அதை சொல்லுவதால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பம் வந்து விடும் என்று பயபடுகிறேன்" என்று. நாமும் விட மாட்டோம். யாரென்று சொல்லுங்க என்று மன்றாடுவோம். அவனும்  ரொம்ப பிகு பண்ணிய பிறகு, நம்மிடம் பிரச்சனை படக்கூடாது அது இது என்று சத்தியமெல்லாம் வாங்கி விட்டு வரலாற்று சிறப்பு மிக்க உண்மையை சொல்லுவான். "நீங்கள் மனதில் யாரை நினைத்து இருக்குறீர்களோ அவர்தான்" என்று. நாம் அதற்கு முன்பே சொல்லியிருப்போம் எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருக்கு என்று. அதை வைத்து சரியா பயபுள்ள நம்மை கோர்த்து விடுவான். அதை நாம் நம்பி ஒரு அப்பாவியை பிடித்து வைத்து குமுறுவோம். வீட்டினுள் வந்து போனவன்  சொந்தக்காரனாக வேறு இருந்து விட்டால், குடும்பங்கள் பிரிவதும் உண்டு.



உண்மையில் மேலே உள்ள சம்பவத்தில் மந்திரவாதி செய்தது என்ன? நம்மிடம் போட்டுவாங்கி அவன் வாயால் சொல்லுவான், அதுவும் சர்வ ஜாக்கிரதையாக. நாம் அந்த அப்பாவியை அடித்து பிரச்சனை ஏதும் வந்தால், மந்திரவாதி தப்பி விடுவான். அவன்தான் யார் பெயரையும் சொல்லவில்லையே. சிலவேளை நாம் யாரையும் சந்தேகப் படவில்லை என்று அவன் கண்டு கொண்டால், அப்பவும் நமக்கு அல்வா தான். "உங்கள் வீட்டினில் சதுரமான இடத்தில் தான் அது இருக்கு. மூன்று நாளைக்குள் கிடைத்தால் உங்களுக்கு. இல்லை என்றால் கிடைக்காது" என்று சொல்லி விடுவான். நம் வீடு காணி எந்த இடமும் சதுரம் தான் என்பது நம் மரமண்டைக்கு அப்போது புரியவே புரியாது.   வீட்டினில் வட்டமான ஒரு பானைக்குள் அந்த நகை கண்டுபிடிக்கப் பட்டாலும், அந்த பானை இருந்த இடம் சதுரமான அறை என்று அவன் சமாளிப்பான். பின்னே என்ன, நகை கிடைக்குதோ இல்லையோ, நகையின் பெறுமதியில் அரைவாசியை தட்சணையாக  கொடுத்து விட்டு வீர நடை போட்டு வருவோம்.




முக்கியமாக இதில் ஒரு விடயம், நாம் மந்திரவாதியிடம் போனதும் சடங்கு(?) என்னும் போர்வையில் நமக்கு மூளைச்சலவை செய்வான். முதலில் பழம் ஒன்றின் பெயரை நினையுங்க என்பான்  நாமும் நினைப்போம். சரியாக நாம் நினைத்த  பழத்தின் பெயரை சொல்லுவான், பின் ஒரு பூவின் பெயரை நினைக்க சொல்லுவான். நாமும் நினைப்போம். அதையும் சரியாக சொல்லுவான். இது எப்படி செய்கிறான? . பழம் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, மாம்பழம் அல்லது அப்பிள்தான். பூ என்றால் மல்லிகை அல்லது செம்பருத்தி தான். மற்றது அவன் இருக்கும் இடத்தின் அனுமாஷ்யமும், அவன் செய்கைகளில் நாம் கொண்ட பயபக்தியும், அவனின் பயமுறுத்தும் நடவடிக்கைகளும்  நம்மை சிந்திக்க விடாது. பழம் என்றால் செர்ரி என்றோ  பூ என்றால் தேங்காய்ப்பூ என்றோ சொல்ல நமக்கு தோன்றாது. இது எல்லாவற்றுக்கும் மேலாக டெலிபதி என்னும் கலையும் இங்கு அவனால் பாவிக்கப் படும். அவன் என்ன நினைக்கிறானோ அதையே நம்மையும் நினைக்க தூண்டி விடுவான். அப்புறம் என்ன? நாம் நினைத்ததை அவன் சொல்லி விட்டால், காலம் முழுக்க நாம் அவன் காலடியில் தான்.

-இன்னும் வரும் 

முந்தைய பாகங்களுக்கு : பாகம் 01 பாகம் 02 பாகம் 03 பாகம் 04 பாகம் 05

 

Wednesday, July 2, 2014

ஊடலும் கூடலும்.......! 






ஒன்றுமில்லை என்ற 
ஒத்த வார்த்தையில்
ஓராயிரம் அரத்தங்களை 
ஒளித்து வைத்து விட்டு 
ஓயாமல் என்னை வதைப்பது ஏனோ..........?



உன் பாதி மௌனத்தில் 
மோதி மூக்குடைந்து
கூனிக் குறுகி
நாணத்தில் நான்....!




மூச்சடக்கி முக்குளிக்கிறேன்
உயிர் திணறுகிறது
முத்தைத்தான் காணோம்....!


ஏனடி சொன்னாய்..?
எதற்கு சொன்னாய்..?
என்னை கொல்லவா..?
உயிரை வெல்லவா..?
சட்டென்று சொன்னதால்
திக்குமுக்காடி போனேன் 
காதோடு சொன்னதால் 
பித்தனாக ஆகிவிட்டேன்....!





உள்ளத்தையும் திறந்து விட்டாய்
கள்ளத்தையும் களைந்து விட்டாய்
தோழி நீ சொன்ன காதல்
கொண்டுவந்து சேர்க்கும்
காத்திரு என்னை...!













புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!