Monday, June 2, 2014

முந்தைய பாகத்தில் மந்திரவாதிகள் நம்மையும் நம் இடத்திலும் பேய் பிசாசுகளை அடையாளம் காணுவதிலும் அதை உறுதிப்படுத்துவதிலும் நம்மை எப்படி ஏமாற்றி பிடுங்குகிறார்கள் என்று பார்த்தோம். இனி அப்படி அடையாளம்(?) காணப்பட்ட பேய் அல்லது பிசாசை விரட்டுகிறேன் பேர்வழி என்று நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் நம்மை பிடித்த பேய் பிசாசு பற்றி மந்திரவாதி கொடுப்பார் பாருங்க விளக்க வெண்ணை ஒண்ணு மதிமயங்கி போயிடுவோம், அது ஏன் வந்தது, நம்மை ஏன் பிடித்தது, அதற்க்கு இப்போ என்ன வேணும், எப்படி விரட்டுவது என்று அள்ளி விடுவாரு பாருங்க ஏதோ அவருதான் அதை வளர்த்து நம்ம மேல ஏவி விட்டவர் மாதிரி இருக்கும். அப்புறம் அதை விரட்ட ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம கையில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுப்பார், அதில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏன் வாங்க சொன்னார் என்று நமக்கும் புரியாது அவருக்கும் தெரியாது. இருந்தாலும் வாங்கி வைப்போம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த மாந்திரிகத்திக்கு மிக முக்கியமாக தேவைப்படும் ஓன்று ரெண்டு பொருட்கள் நம்மை வாங்க சொல்ல மாட்டார் அவரே வாங்கிக் கொள்வதாக் சொல்லி அதற்கும் வேறையாக நம்மிடம் பணத்தை ஆட்டையப் போட்டு விடுவார். இப்படி பேய் விரட்டுவதற்கு பல முறைகள் இருந்தாலும் உதாரணத்திக்கு ஒரு முறையை பார்ப்போம்.

குறித்த நாளில் நம் வீட்டிற்க்கு வரும் மந்திரவாதி, மந்திர வேலைகளுக்கு உரிய ஆயத்தங்களை செய்து விட்டு, பாதிக்கப் பட்டவரை அவ்விடத்தில் தன் முன்னால் வைத்து நாலு மணி நேரம் மந்திரம் சொல்லி பாதிக்கப் பட்டவரை படுத்தும் பாடு இருக்கே, உண்மையில் பேய் இருந்தால் கூட அப்படி ஒரு சித்திரவதை பண்ணி இருக்குமா என்பது சந்தேகேமே. இதையெல்லாம் முடித்து விட்டு கிளைமாக்ஸ் ஆரம்பமாகும். ஒரு நன்றாக சீவி எடுக்கப்பட்ட தேங்காய் சிரட்டை (இந்த சிரட்டைதான் நம் வீடும் நம் இடமும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பார்) ஒன்றில் மந்திரவாதி "மந்திரித்து" கொண்டு வந்த ஏழு சுண்ணாம்பு சிப்பிகளை    போடுவார் (மூன்று, ஏழு, பதினொன்று என்ன கணக்கு என்று அவர்களுக்கும் தெரியாது), அதுதான் நம் வீட்டில் உள்ள பேய்கள் என்று விளக்கம் வேறு. பின் அவரே கொண்டுவந்த மந்திர தண்ணியை அதனுள் ஊற்றி (அதுதான் அவரது மந்திர சக்தியாம்) மந்திரம் சொல்ல தொடங்குவார். இப்போது மந்திரம் உச்சத்தை அடையும். இந்த நேரத்தில் சிரட்டையினுள் இருக்கும் சிப்பிகள் மெதுவாக ஒவ்வொன்றாக தானாக வெளியேறத் தொடங்கும். எல்லாம் வெளியேறி முடிந்தவுடன் மந்திரவாதி முகத்தை பார்க்கவேண்டும். மலையைப் பிளந்த பெருமிதம் தெரியும். நமக்கு சர்வமும் ஒடுங்கிப் போய் அவர் தெய்வமாக தெரிவார். பின் அவருக்கு உரியதை பயபக்தியோடு கொடுத்து வழியனுப்பி வைப்போம்.

உண்மையில் ஒரு பாத்திரம் போன்ற ஒன்றில் இருந்து உள்ளே போடப்பட்ட ஒரு சடப் பொருள் தானாக அசைந்து வெளியேறினால் அதற்கு காரணமானவனை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல. இங்கு  நடந்தது இதுதான், சிப்பிகள் உண்மையானவை, அதில் எந்த மாற்றமும் இல்லை, தேங்காய் சிரட்டையும் உண்மையானது அதிலும் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் ஏமாற்று வித்தை இருப்பது மந்திரவாதி கொண்டு வந்த மந்திர தண்ணியில் தான், அது மந்திர தண்ணி அல்ல, பேட்டரி அசிட், பள்ளியில் விஞ்ஞான பாடத்தை ஒழுங்காக படித்தோருக்கு இப்போது விளங்கி இருக்கும். சுண்ணாம்பு சிப்பி ஒரு காரம், பேட்டரி அசிட் ஒரு அமிலம். எப்போதும் இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது, அதிலும் சுண்ணாம்பு சிப்பி பலகீனமானது. அதனால் தான் பேட்டரி அசிட் தாக்கம் தாங்காமல் தானாக நகரத் தொடங்கும். அனால் இங்கு தேங்காய் சிரட்டை எடுத்ததன் காரணம், வேறு பாத்திரத்தில் இதனை செய்தால் காரமோ அமிலமோ அதனுடன் தாகம் புரிந்து மந்திரவாதிக்கு தேவையான பெறுபேறு கிடைக்காமல் போகலாம் என்பதால் தான்.

இப்போது உங்கள் வீட்டில் உள்ள உங்களை பிடித்த பேயினை விரட்டி ஆகிவிட்டது. அத்தோடு போச்சா திரும்ப வந்தால், அதனால் அடுத்த பதிவில் திரும்ப வராமல் எப்படி காவல் செய்வது என்று பார்ப்போம்.

-தொடரும் 

முந்தைய பாகத்திக்கு : பாகம் 01   பாகம் 02

Sunday, June 1, 2014

எனது நண்பர் வாய்ப்பாட்டு அவர்களின் முகப் பக்கத்தில் எனக்கும் அவருக்கும் நடந்த சொல்லாடல், அவரின் தமிழ் வியக்க வைத்த ஒன்று. என் தமிழ் புடம் போடப் பட்டதும் அவரிடம்தான்.


வாய்ப்பாட்டு:

விடை தெரிந்த கேள்வியது 
வாழ்க்கை வழியில்தான் 
எத்தனை எத்தனை பாடங்கள் 
எழுதியும் எழுதாததுமான 
எத்துணை  எத்துணை  தேர்வுகள் 
தேர்ந்தாலும் தோற்றாலும் 
அத்தனைக்கும் ஒரே விடைதான் 
அது அனைவரும் அறிந்த விடைதான் 
ஆனாலும் பாடங்கள் படித்த வண்ணமும் 
தேர்வுகள் எழுதிய வண்ணமுமாய் 
மனிதன் விடை தெரிந்த கேள்விக்கு 


ஒண்ணும் தெரியாதவன்:

தெரிந்த விடையை பகுத்தரியாவிட்டால் 
தேர்வில் தோல்விதான் 
விடை தெரிந்த கேள்விக்கு 


வாய்ப்பாட்டு:

என்னதான் பகுத்தாலும் அறிந்தாலும் 
அல்லது அரிந்து பகுத்தாலும் 
விடையத்தை கேள்வியிலேயே தெளிவாக வைத்து 
கேள்வியிலேயே நம்மை வைத்து 
தேடிக்கொண்டிருப்பதிலேயே 
காலத்தை நகர்த்தும் நாயகன் அவன் 
உறவும் துறவுமாய் வாழ்வில் உழன்று மருண்டு
பதிலிருந்தும் கேள்வியிலேயே முடிந்து போகும் வாழக்கை


ஒண்ணும் தெரியாதவன்:

நாயகனை பகுத்தறியா பகுத்தறிவில் 
நாயகன் வைத்த கேள்வியை பகுத்தறிந்து 
விடையறிவதை நாயகனே அறிவான் 


வாய்ப்பாட்டு:

எல்லாம் அறிந்த ஏகன் அவன் 
இனி ஒன்றை அறிய இனி ஒன்றும் இல்லை 
எங்கும் அறிந்தொழுகவேண்டி அவன் தந்த பகுத்தறிவு 
அவனை அளக்க முற்படின் 
எதையளக்க அறிவுதந்தானோ 
அதை மறந்து ஏற்றம் தரும் 
உபயம் தொறந்து எது கேள்வி என்று அறியா 
எல்லாமே கேள்வியாகவே 
தொக்கி நிற்கும் தொவியாகும் வாழ்வு 


ஒண்ணும் தெரியாதவன்:

மனைவி மக்கள் 
உற்றம் சுற்றம் 
நட்பு துரோகம் 
கூடவே தன்னையும் முழுமையாக 
பகுத்தறிய முடியா பகுத்தறிவினை கொண்டு 
இவையனைத்தையும் ஆட்டுவிக்கும் 
ஏகனை பகுத்தறிய முற்படின் 
ஏற்றம் உண்டோ 
இம்மை மறுமை வாழ்வில் 



கண்ணை மூடிக்கொண்டு 
தியானம் அல்ல என் தத்துவம் 
கேள்வியை வைத்து 
பதில் தேட சொல்லும் மார்க்கம் 
ஊர் உறவு சுற்றம் எல்லாம் சூழ்ந்து நின்று 
நீ தனித்த பின் 
என்ன இருக்கிறது எங்கே இருக்கிறாய் யார் நீ 
என்ற கேள்விக்கு
விடை தேட சொல்லும் வலி அது 



மார்க்கம் சொல்லும் வழியை 
பகுத்தறியா மூடர் வாழும் அவனியில் 
சரியான பாதைக்கு 
சரியான பகுத்தறிவாளர் என 
பகுத்தறிய முடியாதோர்க்கு 
மார்க்கம் என்ன 



ஒற்றையானோம் என்றில்லாமல் 
அடுத்தவர்க்கு எடுத்தோதுவதே 
உயர்ந்த பணி என்று 
படைத்தவன் பணித்ததை 
கொண்டு செல்வதே பகுத்தறிவு 



இருட்டில் இருக்கும் பாமரனுக்கு 
ஏகனே கலங்கரை விளக்கு 


இன்னும் வரும்...........!

இந்த சொல்லாடல் இடம் பெற்ற முகப் பக்கத்திக்கு 

Saturday, May 31, 2014

சென்ற பாகத்தில் மந்திரவாதிகளின் பேச்சு, சாதுரியம், சாமர்த்தியம்  பற்றியும் அதில் நாம் விழுவது எப்படி என்று   பார்த்தோம். இந்த பாகத்தில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்துகட்டி நம் காதில் எப்படி பூ சுற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

முதலில் இந்த மந்திர வேலைகளை மூன்று பிரிவாக பிரித்து நம்மிடம் இருந்து பணமாக பொருளாக ஆட்டையப் போடுவார்கள்.
  1. பேய் பிசாசுகளை அடையாளம் காணுதல்  உறுதிப் படுத்தல்  
  2. அவற்றை நம் இடத்திலிருந்தும் , பாதிக்கப்பட்டவரிடம் இருந்தும் விரட்டுதல் 
  3.  இனி அவைகள் நம்மிடம் அண்டாதவாறு பாதுகாப்பு செய்தல் 

நம் இடத்தில் இருக்கும் பேய் பிசாசுகளை அடையாளம் காண பலமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு ஒரு முறை, நம் வீட்டிக்கு மந்திரவாதி வருவதற்கு முன்பு வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்ட் ஓன்று  கொடுப்பார். அதில் முக்கியமாக மூன்று வர்ணத்தில் கோழி முட்டை என்று இருக்கும். மூன்று வர்ணத்தில் தான் உலகத்தில் கோழி முட்டை இருக்கின்றது என்பது வேறு விடயம் (பிரவுன், பழுப்பு, நல்ல வெள்ளை என்பன அவை). குறித்த நாளில் மந்திரவாதி நம் வீட்டுக்கு வருகை தந்து, வாங்கிய  வாங்கப் போகின்ற காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மந்திரம் சொல்லிவிட்டு அந்த மூன்று முட்டைகளையும் பரிசோதித்து விட்டு அதில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்தெடுத்து வீட்டு முற்றத்தில் அவர் கையால் 2 அடி வரை குழி  தோண்டி மந்திரம் மீண்டும் சொல்லி முட்டையை அவர் கையாலேயே நாம் எல்லோரும் பார்க்க குழியில்  வைத்து மந்திர தண்ணிய அதன் மீது தெளித்து குழியை மூடி விடுவார், பின் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள திடகாத்திரமான ஆணை கூப்பிட்டு அந்த குழியை மீண்டும் தோண்டி அந்த முட்டையை எடுத்து வர சொல்லி விட்டு நாம் கொடுத்த அவர் சிற்றுண்டியில் கவனமாக இருப்பார். தோண்ட சென்றவர் அன்றைய பொழுதுக்கு தோண்டினாலும் மசகு எண்ணை வந்தாலும் வருமே தவிர முட்டை கிடைக்காது. உடனே மந்திரவாதி அந்த இடத்துக்கு வந்து குழியை பரிசோதித்து முட்டையை கொண்டு சென்ற பேயின் பூர்வீகமும் அது ஏன் நம்மை பிடித்தது என்ற வெவரமும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுவார்.

நடந்தது இதுதான், தங்கம் வேலைகளுக்கு  பாவிக்கப்படும் வெண்காரம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு தன்மை இருக்கிறது, காற்றுப் பட்டால் திண்மம் ஆகிவிடும், அப்படி அதனை திண்மமாக்கி முட்டை வடிவத்தில் மந்திரவாதி சீவி வைத்துக் கொள்வார் யாருக்கும் தெரியாமல். இந்த முட்டை வெவகாரத்தில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்து எடுத்ததுக்கும் காரணம், இந்த வெண்காரத்தால் செய்யப்பட்ட முட்டை அதே மாதிரி கலரில் இருப்பது ஆகும். உண்மையான கோழி முட்டையையும் இந்த வெண்கார முட்டையையும் மாற்றுவதுதான் மந்திரவாதியின் உழைப்பு தந்திரம். பின் அவர் கையால் வெண்கார முட்டையை குழியுனுள்  வைப்பதும் யாரும் அதனை கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக தான். அதன் பின் மந்திரத் தண்ணி தெளிப்பதில் தான் விசயமே இருக்கிறது அது மந்திரத் தண்ணி அல்ல. வெறும் பச்சத்தண்ணி தான். வெண்காரத்தில் ஒரு தன்மை உள்ளது, தண்ணீர் பட்டவுடன் கரைந்து விடும், விஞ்ஞான முறைப்படி சொல்வதானால், தண்ணீர் பட்டவுடன் எச்சமில்லாமல் தகனமடையும். இப்போ புரிந்திருக்கும் முட்டை எங்கு போயிருக்கும் என்று.

இப்படி ஆயிரம் வழிகளில் பேய் பிசாசுகளை அடையாளம் காணலாம் , அடுத்த பாகத்தில் கண்டு பிடித்த பேய் பிசாசுகளை நம் வீட்டில் இருந்தும் நம்மில் இருந்தும் எப்படி விரட்டுவார்கள் என்று பார்ப்போம்.

தொடரும்..............!

 முந்தைய பாகத்திக்கு : பாகம் 01

Friday, May 30, 2014

சிறந்த மந்திரவாதி ஆவதற்கு முதலில் நா வன்மை அவசியம் ஆகிறது, உலகில் உள்ள எல்லோரையும் ஓன்று கூட்டி ஒருத்தர் விடாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சாஸ்த்திரத்தை நா வன்மையால் கூறமுடியும், "நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்வீர்கள் உங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கூறினால் யார்தான் மறுக்க போகிறார்கள். இது சாதாரண மனித மனோன் நிலை. இதுதான் மந்திரவாதிகளின் முதல் அஸ்திரம்.

இரண்டாவது சமயோசிதம், உதாரணம் மந்திரவாதியிடம் நீங்கள் சென்றால் நீங்கள் விபரம் சொல்லுவதற்கு முன்பே அவர் விபரம் சொல்லுவார் இப்படி, "தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்பார், உடனே நாம் ஏதாவது தொலைத்துவிட்டுத்தான் அங்கு போயிருந்தோம் என்றால் உடனே நாம் "கிடைக்குமா? கிடைக்காதா?" என்போம். அவருக்கு நிச்சயம் ஆகிவிடும் நாம் தொலைத்து விட்டுதான் வந்திருக்கிறோம் என்று. ஒரு வேளை நாம் வீட்டில் உள்ளவரின் நோய் சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தால், நாம் யோசிப்போம் நாம் நோய்க்கு  மாந்திரிகம் பார்க்க வந்திருக்கிறோம் இவர் தொலைத்த கதை சொல்கிறார் என்று, இப்போதான் சமயோசிதம் தேவை. நாம் யோசிப்பதை பார்த்ததும் அவர் அடுத்த பிட்டை போடுவார், "வாழ்கையில் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்று, நாம் அவுட். வீட்டில் யாரும் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது மேற்சொன்னவை இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் ஏற்ற இறக்கங்ககளுடன் சொல்ல வேண்டும்.

மூன்றாவது வார்த்தை ஜாலங்ககள், சொல் மயக்கம் வரும் படி பேசுவது, இப்போ நம்மிடம் சொல்லுவார், "எல்லாவற்றையும் பார்க்கலாம், முதலில் உங்கள் வீட்டு முற்றத்தில் கால் படாத மண்ணை கைபடாமல் கொண்டுவா" என்பார், சின்ன விசயம்தான் ஆனால் சட்டென்று விளங்காது. அது மட்டுமல்ல, "ஒரு கிடா ஆடு வேண்டும் பலி கொடுக்க, ஆனால் அதன் தாயிக்கு இதற்க்கு பிறகு குட்டி இருக்க கூடாது" என்றெல்லாம் நம்மை சுத்தலில் விடுவார்கள், எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கும் வார்த்தைகள். ஒன்னும் இல்லை முதலில் சொன்னதற்கு நம் முற்றத்தில் பள்ளம் தோண்டி அதற்குள் இருக்கும் மண்ணை கையில் கிளவுஸ் எதாவது போட்டு எடுக்க வேண்டும், மற்றது தாய் இறந்துவிட்ட ஆட்டு கிடா வேண்டும் அவ்வளவுதான்.ஆனால் இதெல்லாம் எதற்கு கேட்கிறார்கள் என்பதுதான் இறைவனுக்கு வெளிச்சம்.

அடுத்த பகுதியில் விஞ்ஞானத்தையும், தந்திரத்தையும் கலந்து கட்டி எப்படி மாந்திரிகம் செய்கிறார்கள் என்று சொல்கிறேன்.

தொடரும்.......!


Thursday, May 29, 2014

நானாகவும் நீயாகவும்
நாம் நமக்காகவும் நட்பாகவும்
எதுவாகவும் எப்படியாகவும்
சொற்களில் தேனாகவும் வேம்பாகவும்
வேம்பில் மருந்தாகவும் கசப்பாகவும்
செய்கை கூடலாகவும் ஊடலாகவும்
ஊடலில் வெறுப்பாகவும் விருப்பாகவும்

அதுவாக எதுவாக அப்படியாக
என்பது இல்லை செப்படி வித்தையாக
ஏட்டிலும் இல்லை 
யார் பாட்டிலும் இல்லை
எவர் கூற்றிலும் இல்லை
உன் மனதை திறந்தால்
இருக்கும் அன்பு சொல்லுமடி






புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!